ஜகார்த்தா: இந்தோனேசிய நாட்டில் நடைபெற்ற முதலாவது ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா; அழகுப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக 6 போட்டியாளர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளதாகவும் போட்டியாளர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் கடந்த மாதம் 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஜகார்த்தா நகரில் அமைந்துள்ள பீச் சிட்டி சர்வதேச மைதானத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டி நடைபெற்றது. சுமார் 30 பேர் இதில் பங்கேற்றனர். இதில் ஃபபியன் என்பவர் பட்டம் வென்றுள்ளார். அவர் தான் இந்தோனேசியா சார்பில் மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த சூழலில்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர்தான் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளனர். மேலாடையின்றி போட்டியாளர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு உடல் பரிசோதனை என சொல்லி சீண்டலில் ஈடுபட்டதாகவும். மேலாடையின்றி புகைப்படம் எடுத்த போது ஆண்களும் இருந்ததாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரும் இது தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இது நடைபெற்றுள்ளது.