கோப்புப்படம் 
உலகம்

சிறுவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்த சீன அரசு கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.

குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் தூக்கமிழப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக கூறப்படும் நிலையில், சீன அரசு ஸ்மார்ட்போன் பயன்பாடு சார்ந்து புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பான வரைவை சீன அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது. 8 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரமும் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும். மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் ஸ்மார்ட்போனில் இணைய சேவையை பயன்படுத்தக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்க செப்டம்பர் 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் கேம் விளையாடக் கூடாது என்று 2019-ம் ஆண்டு சீன அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT