சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 5 பேருக்கு புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
அவர்களுக்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டதால் புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே சிங்கப்பூர் அரசின் இலவச சட்ட ஆலோசனை சேவை மூலம் வழக்கறிஞர்களை பெற்றிருந்தனர். இவர்களுக்காக வாதாடி வந்த வழக்கறிஞர் ரவி, அதிக வழக்குகளை கையாள வேண்டியிருப்பதாகக் கூறி 5 இந்தியர்களின் வழக்கை விசாரிக்கும் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
வழக்கு விசாரணை பாதி அளவில் முடிந்துள்ள நிலையில் வழக்கறிஞர் விலகியிருப்பது பாதகமாகக் கருதப்படுகிறது. புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டாலும் அவர் வழக்கை முழுமையாகப் புரிந்து கொள்ள சிறிது காலம் பிடிக்கும்.
2013-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழக தொழிலாளி ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் பல சேதப்படுத்தப்பட்டன. சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதையடுத்து ஏராளமான இந்தியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 52 இந்தியர்களை சொந்த நாட்டுக்கு சிங்கப்பூர் அரசு அனுப்பி வைத்தது. மேலும் சிலருக்கு சிறைத் தண்டனை விதித்தது.