இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என நம்புகிறேன். இதுதொடர்பாக இருதரப்பினரும் எடுத்து வரும் முயற்சி வரவேற்கத்தக்கது” என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்கள் முறையே சுஜாதா சிங், அய்ஜாஸ் அகமது சவுத்ரி ஆகியோர் ஆகஸ்ட் 25-ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு ஹார்ப் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
இரதரப்பு உறவை பலப்படுத்துவது, தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது மற்றும் எல்லைப் பிரச்சினை குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளாக தடைபட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது, மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.