இந்தியாவின் புதிய அரசின் கீழ் இந்திய - அமெரிக்க உறவுக்கு புத்துணர்வூட்டும் வாய்ப்புகளை அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடெஸ் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், “ஒபாமா மோடி சந்திப்பின்போது, பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி, பருவநிலை மாற்றம், பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியம் தொடர்பான விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும். வரும் ஆண்டுகளில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும்.
இந்திய அமெரிக்க உறவுக்கு புத்துணர்வூட்டும் வாய்ப்புகளை வெள்ளை மாளிகை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. மோடி ஒபாமா சந்திப்புக்கு இதுவரை தேதி முடிவாகவில்லை” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க இந்திய உறவுக்கு உத்வேகம் அளிக்கும் வாய்ப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். இந்தியாவில் வலுவான பிரதமர் அமைந்திருப்பது இதற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும், மிகுந்த ஆற்ற லுடனும், குறிக்கோள்களுடனும் மோடி அரசு அதிகாரத்துக்கு வந்துள்ளது. மோடியின் தேர்தல் பிரச்சாரம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதே மோடியின் முன்னுரிமைப் பணியாக இருக் கும். இது எங்களுக்கும் பயனளிப் பதாக இருக்கும்.
இந்தியாவின் முன்னேற்றத் துக்கு உள்நாட்டில் மேற் கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நாம் மிகுந்த ஆதரவளிப்போம். ஏனென்றால் அதனால் அமெரிக் காவும் பயனடைவது நிச்சயம்.
வர்த்தம், முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத் தும் நடவடிக்கைகள் பேச்சுவார்த் தையில் முக்கிய இடம்பிடிக்கும்” என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரும் செப்டம்பரில் மோடி சந்தித் துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.