உலகம்

போர் நிறுத்தம் முறிந்தது: காஸா மீது மீண்டும் தாக்குதல்

செய்திப்பிரிவு

இஸ்ரேல் அரசு அறிவித்த 24 மணி நேர போர் நிறுத்தத்தை ஹமாஸ் இயக்கத்தினர் ஏற்க மறுத்து ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் காஸாவை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

காஸாவின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த ஜூலை 8-ம் தேதி முதல் இப்போதுவரை சுமார் 1,050 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000-க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர். இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பொது மக்கள் ஆவர். சுமார் 1,20,000 பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டிருக் கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் போரில் 192 குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளதாக ‘யுனிசெஃப்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை 12 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் மேற்கொண்டன. அப்போது ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்திய பாதாள சுரங்கங்களை இஸ்ரேல் ராணுவம் அழிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் ஐ.நா. சபை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் இஸ்ரேல் நீட்டித்தது. இதை ஹமாஸ் இயக்கத்தினர் ஏற்க மறுத்து ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் இயக்கத்தினர் 5 ராக்கெட் குண்டுகளை வீசினர். இதில் 2 ராக்கெட் குண்டுகள் நடுவானில் அழிக்கப்பட்டன, 3 குண்டுகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT