மாஸ்கோவில் பாதாள ரயில் ஒன்று தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 பேர் உயிருக்குப் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென மின்வெட்டு ஏற்பட ஓடிக்கொண்டிருந்த இந்த ரயில் அப்படியே நிறுத்தப்பட்டதில் பல பெட்டிகள் தடம் புரண்டன.
இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பெட்டிகளில் உள்ள மேலும் 12 சடலங்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாஸ்கோவில் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. ஆனால் இது பயங்கரவாத் தாக்குதல் அல்ல என்று ரஷ்ய அதிகாரிகள் கடுமையாக மறுத்துள்ளனர்.
இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் விபத்துக்குள்ளானது. ரயிலில் இருந்து சுமார் 1,100 பேர் அருகில் உள்ள பாதாள ரயில் நிலையமான பார்க் போபெடிக்கு மீட்கப்பட்டுள்ளனர்.
மாஸ்கோவில் பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் இருப்பது பார்க் போபெடி பாதாள ரயில் நிலையம். அதாவது 84 மீட்டர்கள் (275 அடி) ஆழத்தில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மீட்புப் பணி பெரும் சவாலாக இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர விபத்தினால் பாதாள ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.