உலகம்

நாடாளுமன்றத்திடம் ரூ.12,023 கோடி கோருகிறார் அதிபர் ஒபாமா: சிறார்கள் குடியேற்றப் பிரச்சினை

செய்திப்பிரிவு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.12,023 கோடி அவசர நிதிக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்திடம் அதிபர் ஒபாமா கோரியுள்ளார்.

பனாமா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டெக்சாஸ் மாகாணம் வழியாக நூற்றுக்கணக்கான சிறார்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அமெரிக்கா சார்பில் மத்திய அமெரிக்காவில் உள்ள நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினை சிறார்கள் தொடர்புடையது என்பதால் எல்லைப் பகுதிகளில் ஏராளமான நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சமூகவிரோத கும்பல்கள் அண்டை நாடுகளில் இருந்து குழந்தைகளை கடத்தி கொண்டு வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை அமெரிக்க அரசு தீட்டியுள்ளது. அதற்கு அவசர கால நிதியாக ரூ.12023 கோடியை அனுமதிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT