உலகம்

அல் காய்தாவுக்கு உதவியதாக அமெரிக்க இந்தியர் ஒப்புதல்: 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

அல் காய்தாவுக்கு நிதி உதவியும், ஆட்களை திரட்டித் தரும் பணியையும் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்க வாழ் இந்தியர் குப்ரான் அகமது கவுசர் முகமது நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர் குப்ரான் அகமது கவுசர் முகமது (31). அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவர், சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் வசித்து வந்தார். அப்போது அல் காய்தாவுக்கும், அதைச் சார்ந்த அமைப்புகளான சோமாலியாவில் செயல்படும் ஷெபாப் தீவிரவாதிகளுக்கும், சிரியாவில் செயல்படும் அல் நஸ்ரா என்ற தீவிரவாத அமைப்பினருக்கும் அவர் உதவி வந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

அல் காய்தா தீவிரவாத அமைப்புக்கு பணம் தருமாறு 96 ஆயிரம் அமெரிக்க டாலரை கென்யா நாட்டைச் சேர்ந்த முகமது ஹுசைன் சேத் (25) என்பவருக்கு குப்ரான் அகமது கவுசர் அனுப்பியுள்ளார். இருவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ய உதவியதுடன், புதிய ஆட்களை சேர்த்து விடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தனது குற்றச்சாட்டை குப்ரான் அகமது கவுசர் மறுத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை மியாமி நீதிமன்றத்தில் நீதிபதி அர்சுலா அங்காரோ தலைமையில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குப்ரான் அகமது கவுசர், அல் காய்தாவுடன் தொடர்புடைய சிரியாவில் செயல்படும் அல் நஸ்ராவுக்கும், சோமாலியாவில் செயல்படும் ஷெபாப் அமைப்புக்கும் பணம் மற்றும் பொருட்களை வழங்கி வந்ததாகவும், அந்த அமைப்புகளில் புதிதாக ஆட்களை சேர்த்துவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு வரும் அக்டோபர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். கவுசருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT