பிரபலமான சித்திரக்கதையான ஜங்கிள் புக்-ஐ திரைப்படமாக எடுக்கும் டிஸ்னி, அதில் மோக்லியாக நடிக்க இந்திய வம்சாவளி அமெரிக்க சிறுவனை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்டு கிப்ளிங்கால் ஜங்கிள் புக் கதை எழுதப்பட்டது. வனத்துக்குள் அநாதரவாக விடப்பட்ட சிறுவனை ஓநாய்கள் வளர்க்கும். மோக்லி எனப் பெயரிடப்பட்ட அச்சிறுவனைச் சுற்றி நடக்கும் கதையே ஜங்கிள் புக். நன்னெறிக் கதையாக வடிவமைக்கப்பட்ட ஜங்கிள் புக் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று.
இதனை டிஸ்னி நிறுவனம் திரைப்படமாக எடுக்கிறது. இதில், மோக்லியாக நடிக்க, நியூயார்க்கில் பிறந்த நீல் சேதி எனும் பத்து வயது இந்திய வம்சாவளிச் சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான். இத்திரைப்படத்தில் நடிக்கும் ஒரே மனிதன் இவன்தான். மற்ற விலங்குகள் அனிமேஷன் முறையில் உருவாக்கப்படவுள்ளன.
ஜான் பவ்ரியூ இத்திரைப்படத்தை இயக்குகிறார். ஜஸ்டின் மார்க் திரைக்கதையை வடிவமைத்துள்ளார். இப்படம் வரும் 2015-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி, முப்பரிமாணப் படமாக திரைக்கு வரவுள்லது. வில்லன் கதாபாத்திரமான ஷேர் கானுக்கு (வங்கப்புலி) இட்ரிஸ் எல்பா பின்னணி குரல் கொடுக்கிறார். அன்பான சிறுத்தையான பகீராவுக்கு பென் கிங்ஸ்லி பின்னணி குரல் கொடுக்கின்றார். இவர்கள் தவிர, ஸ்கார்லட் ஜான்ஸன், லுப்தியா நியாங்கோ ஆகியோரும் பின்னணி குரல் கொடுக்கின்றனர்.