சிரியாவில் ஒரு மாதத்துக்கு முன் கடத்தி பிடித்து வைத்துள்ள 133 குர்து பிரிவு பள்ளிக் குழந்தைகளை ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதிகள் விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மே 29-ம் தேதி 153 மாணவர்களை ஐஎஸ் (ஐஎஸ்ஐஎஸ்) தீவிரவாதிகள் கடத்தி அடைத்து வைத்துள்ளனர். சிரியாவின் வடக்கு பகுதி நகரான அலெப்போவில் பள்ளி இறுதித் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பியபோது தீவிரவாதிகள் அவர்களை கடத்தினர்.
கடத்தப்பட்டவர்களில் 10 பேர் சிறுமிகள். பஸ்களில் இன்-அல்-அராப் நகருக்கு திரும்பியபோது மான்பிஜ் நகரில் தீவிரவாதிகள் அனைவரையும் கடத்தினர். இந்நிலையில், மாணவிகள், சிறுவர்கள் 15 பேரையும் அவர்கள் விடுவித்தனர். 5 மாணவர்கள் தப்பினர் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜிகாத் கொள்கைகள்
ஜிகாத் (புனிதப்போர்) கொள்கைகள் மற்றும் இஸ்லாம் சட்டங்கள் பற்றிய பாடங்களை படிக்கும்படி தீவிரவாதிகள் கட்டாயப்படுத்துவதாக தப்பி வந்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
பிணைக் கைதிகளாக உள்ள தமது குழந்தைகளை சண்டைக்கு தயார்படுத்த தீவிரவாதிகள் முயற்சிக்கக் கூடும் என பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். ஆயுதப்போராட் டத்தில் பிணைக் கைதிகளாக பிடித்து வைப்பதும் குழந்தை களை கடத்துவதும் அவர்களை போரில் ஈடுபடுத்துவதும் போர்க் குற்றம் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் சில பகுதிகளில் குர்து பிரிவினரை எதிர்த்துப் போரிடும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குர்து இனத்தவரை கடத்தி, சிக்கிக் கொள்ளும் தமது வீரர்களை விடுவிக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்.