உலகம்

திக்ரித் நோக்கி இராக் படைகள் முன்னேற்றம்

செய்திப்பிரிவு

சன்னி தீவிரவாதிகள் பிடியில் உள்ள திக்ரித் நகரை நோக்கி இராக் பாதுகாப்புப் படைகள் முன்னேறி வருகின்றன. இந்த தாக்குதல் திக்ரித் நகரின் வடக்கு மற்றும் தெற்கு நுழைவாயில்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இழந்த நகரை மீண்டும் கைப்பற்றுவதற்காக புது தெம்புடன் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரதாக்குதல்

டாங்குகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகளின் பக்க பலத்துடன் பாதுகாப்புப்படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.இது பற்றி திக்ரித்தை தலைநகராக கொண்டுள்ள சலாஹிதின் மாகாணத்தின் ஆளுநர் அகமது அப்துல்லா ஜுபுரி கூறியபோது, திக்ரித் நகரை விடுவிக்க இராக் படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன.

நகரின் தெற்குப்பகுதியை பாதுகாப்புப்படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன என்றார். போலீஸ் அகாடமியும் ஒரு மருத்துவமனையும் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவ கர்னல் ஒருவர் தெரிவித்தார். இதை ஜுபுரி உறுதி செய்தார்.

திக்ரித் நகரை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான பெரியதொரு தாக்குதல் திட்டம் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் தூக்கில் போடப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் சொந்த ஊரான திக்ரித்தின் தெற்கு பகுதியில் இந்த சண்டையில் தொய்வு ஏற்பட்டது.

ஜூன் 11ம் தேதி திக்ரித் நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அரசுக்கு எதிராக கடந்த மாதம் சண்டை தொடங்கியதிலிருந்து 5 மாகாணங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். தொடக்கத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு தப்பிச்செல்லும் நிலைமை பாதுகாப்புப்படைகளுக்கு ஏற்பட்டது.

அதற்கு பிறகு பாதுகாப்புப் படைகள் சிறப்பாக செயல்பட்டன. எனினும் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்ற பாதுகாப்புப்படைகள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர், பிரதமர், அதிபர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கோஷ்டிகளுக்கு இடையே சர்ச்சை நிலவி வருவதால் இது தீவிரவாதிகளுக்கு ஆதாயமாகி அவர்கள் பல பகுதிகளை தம் வசம் கொண்டு வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT