சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்.எச்.17-ன் கருப்புப் பெட்டியை உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை, உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் பிரதமராக அறிவித்துக்கொண்டுள்ள அலெக்சாண்டர் பொரோடாய், மலேசிய உயர்மட்ட குழுவினரிடம் கருப்புப் பெட்டியை ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் மலேசிய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு சர்வதேச விசாரணைக் குழுவினர் சம்பவப் பகுதியை சுலபமாக அணுக கிளர்ச்சியாளர்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இருப்பினும் அத்தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னரே ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸடர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த போயிங் 777 ரக விமானம் எம்.எச்.17 உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள டோனெட்ஸ்க் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் விமான ஊழியர்கள் 15 பேர் உள்பட 298 பேர் பலியாகினர். 282 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 16 உடல்களின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.