வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அன்றைய தினமே அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அன்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தனர். இந்த விருந்தில் பைடனின் விருப்ப உணவான பாஸ்தா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசு தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேசினார். இதன்பிறகு அமெரிக்க அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து ஏற்பாடுகளை அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் நேரடியாக மேற்பார்வை செய்தார்.பிரதமர் நரேந்திர மோடிக்காக அவருக்கு பிடித்தமான சைவ உணவு வகைகள் தயார் செய்யப்பட்டன. கலிபோர்னியாவை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் நினா குர்டிஸ் உணவு வகைகளை தயார் செய்தார்.
இதுகுறித்து நினா குர்டிஸ் கூறியதாவது: இந்தியாவின் முயற்சியால் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்காக சிறுதானியங்களில் பல்வேறு உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு விருந்தில் பரிமாறப்பட்டன. அவருக்கு பிடித்தமான இந்திய உணவு வகைகளையும் தயார் செய்தோம். குறிப்பாக காளான் வகைகளில் பல்வேறு உணவுகளை தயார் செய்தோம். காய்கனிகள், பழங்கள், கீரை வகைகளில் பல்வேறு உணவுகளை தயார் செய்தோம்.
இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ணம், இந்தியாவின் தேசியப் பறவையான மயில் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விருந்து அரங்கு, உணவு வகைகளின் வடிவங்களை உருவாக்கினோம். இவ்வாறு நினா குர்டிஸ் தெரிவித்தார்.
இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு (அமெரிக்க நேரப்படி காலை 10 மணி) அதிபர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். முதலில் இரு தலைவர்களும் தனியாக பேசினர். இதன்பிறகு அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு இந்திய நேரப்படி நள்ளிரவில் இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அதன்பின் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.