இந்தோனேசியாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இந்தோனேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் அங்குள்ள கோமாஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவிலுள்ள டான்கிராங் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
தீ விபத்து காலை 10 மணியளவில் தொழிற்சாலையின் இரண்டு இடங்களில் ஏற்பட்டதாக அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் குறித்து மருத்துவர் ஒருவர் கூறும்போது "பெரும்பாலானவர்களுக்கு 80% சதவீதத்துக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது அவர்களில் பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்'' என்றார்.
தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே செயல்பட்டு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.