உலகம்

ஹபீஸ் சயீத் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை கைகழுவியது பாகிஸ்தான்

முபாஷிர் சைதி

ஹபீஸ் சயீத் மற்றும் இவரது குழுவான ஜமாத் உத் தவா (ஜேயுடி) மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கைகழுவி, வாபஸ் பெற்றது.

முன்னதாக ஹபீஸ் சயீதை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருந்தது பாகிஸ்தான்.

அவர் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாகிஸ்தான் தற்போது கைவிட்ட நிலையில் அமெரிக்கா, ஐநா, இந்தியா ஆகியவை பயங்கரவாதி என்று முத்திரைக் குத்திய ஹபீஸ் சயீத் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனை குழுவிடம் பஞ்சாப் அரசு அதிகாரி, மாகாண அரசாங்கம் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளைச் சேர்க்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சயீதின் வழக்கறிஞர் ஏ.கே.தோகர், ‘சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இல்லை என்பதால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டார்.

லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வாரத்தின் தொடக்கத்தில் சயீத் மீது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையெனில் அவர் விடுவிக்கப்படுவார் என்று அரசை எச்சரித்திருந்தார்.

வெள்ளிக்கிழமையன்று சயீதுக்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. மேலும் சயீதுக்கு எந்தவித சலுகையும் காட்டக்கூடாது, இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தது. சயீத் தலைக்கு 10மில். டாலர்கள் விலை நிர்ணயித்திருந்தது அமெரிக்கா.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கொடுத்த கடும் நெருக்கடிகளையடுத்து ஹபீஸ் சயீதை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது பஞ்சாப் அரசு. இதனை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்த ஹபீஸ் சயீத், தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் இல்லை என்றும் அமெரிக்க நெருக்கடிக்கு அஞ்சி தன்னை கைது செய்ததாகவும் கூறி தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

சயீதுக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் எதையும் பாகிஸ்தான் அதிகாரிகள் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT