உலகம்

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய சிறுமியின் உடல் கண்டெடுப்பு

பிடிஐ

அமெரிக்காவில் காணாமல்போன இந்தியச் சிறுமி ஷெரின் மெத்யூவின் உடலை அந்நாட்டு போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது)  காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.

ஷெரின் வளர்ச்சி மற்றும் பேச்சு குறைபாடுடையவர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரீன் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம்  கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் ஷெரினைத் தேடி தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு அருகில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், "வெஸ்லி மேத்யூவின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுரங்கப் பாதையில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி உடலை கண்டெடுத்தோம். அந்த உடல் காணாமல்போன ஷெரின்தான் என்று அவரது பல் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஷெரின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெஸ்லி மேத்யூ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்லியும் அவரது மனைவி சினியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிஹாரிலுள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஷெரினைத்  தத்தெடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT