இஸ்ரேலில் கடத்தப்பட்ட 3 இளைஞர்களின் சடலங்கள் மேற்கு கரைப் பகுதியில் மீட்கப்பட்டன. கிலாத், நப்டாலி, இயால் ஆகிய 3 இஸ்ரேல் இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போயினர். அவர்களைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. 17 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு அவர்களின் சடலங்கள் தெற்கு மேற்கு கரையில் உள்ள ஹீப்ரான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் அவர்களைக் கடத்தி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
மேலும் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 5 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. 450-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோச னைக் கூட்டத்தை நடத்தினார். இதில் பேசிய அவர், ஹமாஸ் இயக்கத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்தார்.