வெற்றிக் கொடி

அடிப்படைகளை அறிதல்

பெ.சுப்ரமணியன்

வங்கி, அஞ்சல் நிலையம், அரசு அலுவலகங் களுக்குச் சென்று வரிசையில் காத்திருக்கும்போது முதியவர்கள் கையில் ஏதாவதொரு விண்ணப்பத்தை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடமாடுவதைக் காண்கிறோம்.

அப்போது அங்கிருக்கும் இளையோரிடம் சென்று ‘பணம் எடுக்கணும்’ அல்லது ‘பணம் செலுத்தணும்’ என்று மட்டுமே கூறியவாறு கையில் வைத்திருக்கும் படிவத்தை நீட்டுவார்கள்.

அவர்களிடம் படிவத்தை வாங்கி, விவரங்களைக் கேட்டு எத்தனை பேர் பூர்த்தி செய்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலானோர், ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுப்பதும், திறன்பேசியில் பேசுவது போன்று மெல்ல அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடுவதும் வழக்கமான காட்சி.

அறியாமையா, அலட்சியமா?

இதனால், பிறருக்கு உதவும் குணம் நம் இளையோரிடம் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. பெயர், வங்கிக்கணக்கு எண், தொகை என எளிய விவரங்களைக்கூடப் படிவத்தில் உரிய இடத்தில் எழுதும் அடிப்படையான விஷயங்களை இன்றைய தலை முறையினர் அறிந்திருப்பதில்லை. இந்நிலைக்கு, அவர்களின் அறியாமை காரணமா அல்லது அலட்சியம் காரணமா என்பதெல்லாம் விவாதிக்க வேண்டியவை.

இன்று பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பாடங்களைத் தாண்டி பொது விஷயங்களை அறிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. தங்கள் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் முதல் குடியரசுத் தலைவர் வரையிலான பெயர்கள்கூடப் பலருக்குத் தெரிவ தில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

முன்பெல்லாம் பள்ளிகளில் திட்ட அறிக்கையில் அஞ்சல் அட்டை, அஞ்சல் உறை, கடிதம் (இன்லான்ட் லெட்டர்), மணியாடர் படிவம், ரயில் பயணத்துக்கான முன்பதிவு படிவம் போன்றவற்றைப் பூர்த்திசெய்யச் சொல் வார்கள். பின்னர் வெள்ளை அல்லது வண்ணத் தாளில் ஒட்டி அவற்றைச் சமர்ப்பிப்பது வழக்கம். இன்றோ பல பள்ளிகளில் திட்ட அறிக்கை என்பது படங்களுக்கு வண்ணம் தீட்டுவதுடன் முடிந்துவிடுகிறது.

நேரடி அனுபவம்

அதுபோன்று வங்கி, அஞ்சலகம், ரயில் நிலையம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்குப் பள்ளி மாணவர் களை அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பற்றி விளக்கிக் கூறுவது உண்டு. இதுபோன்ற செயல்முறைகளும் இன்று இல்லாமல் போய்விட்டன.

இதற்கு மாறாக வயதுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சுற்றுலா சென்று வருவதுடன் முடிவடைந்து விடுகிறது. சுற்றுலா சென்று வந்ததைப் பற்றிய கட்டுரை எழுதும் நடைமுறையும் இன்றைக்கு இல்லை.

ஒரு வேண்டுகோள் கடிதத்தைச் சரியான முறையில் எழுதத் தற்போதைய எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்? அனுப்புநர் முகவரியில் மாணவரின் பெயர், தந்தை/ தாய் பெயர், கிராமம், அஞ்சலகம், வட்டம், மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் என முழு விவரங்களையும் எழுத வேண்டும்.

அதுபோன்று பெறுநர் முகவரியில் கடிதம் அனுப்பவிருக்கும் அலுவல கத்துக்கு ஏற்றாற்போல் தலைமை ஆசிரியர், முதல்வர், மேலாளர் எனக் குறிப்பிட்டு எழுத வேண்டும்.

அதுபோன்று உறையின் மேற் பகுதியில் அனுப்புநர், பெறுநர், முகவரி எழுதும்போது அதை எவ்விடத்தில், எவ்வாறு எழுத வேண்டும் என்பது முக்கியம். உறையின் வலதுபுறம் மையப்பகுதியில் பெறுநரின் முகவரி யையும், இடதுபுறம் கீழ்ப்பகுதியில் அனுப்புநர் முகவரியையும் எழுத வேண்டும்.

கையெழுத்து எனும் பெருமை

பெரும்பாலான முதியோரிடம், “எழுதப் படிக்கத் தெரியுமா?” எனக் கேட்டால் “கையெழுத்திடுவேன்” எனக் கூறக் கேட்டிருப்போம்.

அரசு அலுவல கங்கள், வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள் நிற்கும்போது காலம் கருதி கைரேகை வைக்குமாறு கூறினால், மறுப்பு தெரிவித்துக் கையெழுத்திடுகின்றனர். பலர் முன்னிலையில் கையெழுத் திடுவதைப் பெருமையாகக் கருது கின்றனர்.

பள்ளிப்பருவத்தின்போது மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் பெறும்போதுதான் கையெழுத்திடுவ தாக இருக்கும்.

அதுவே கல்லூரியில் பயிலும்போது பல்வகையான சான்றுகள் பெறுவதற்கான வேண்டுகோள் கடிதங்கள், தேர்வு விண்ணப் பங்கள், நலத்திட்ட உதவிகள், மதிப் பெண் மாற்றுச் சான்றிதழ்களுக்காகக் கையெழுத்திட வேண்டும்.

ஆனால், எவ்வாறு கையெழுத்திட வேண்டும் என்பதைக்கூட அறிந்திராதவர்களாக அநேக மாணவர்கள் உள்ளனர். இதுபோன்ற அடிப்படைகளை மாணவப் பருவத்தினர் அறிந்து கொள்வது எதிர்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்குக் கைகொடுக்கும். அந்தப் பழக்கங்கள் திரும்ப வர வேண்டும்.

- தொடர்புக்கு: pranavsubu1971@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT