கூப்பர், எதிர்காலத்தில் வாழும் மனிதன். எதிர்காலத்தில் பூமி அவ்வளவு ஆரோக்கியத்துடன் இல்லை. ‘பிளைட்’ எனும் பூஞ்சை நோயால் உணவுப் பயிர்கள் அழிகின்றன.
அதைவிடக் கொடுமை, காற்றில், ஆக்சிஜன் குறைந்துகொண்டே வருகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையில் மனித இனத்தை காப்பாற்றியே ஆகவேண்டும். மனிதர்கள் வாழத்தகுதியான வேறொரு உலகைக் கண்டறிய வேண்டும்.
ஆனால் அது போன்ற உலகங்களோ, நம்முடைய பால்வெளி நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி வேறொரு விண்வெளிப் பகுதியில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் போனால்கூட, அங்குச் செல்வ தற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
அப்படியானால் மனித இனம் வாழ்வதற்குச் சாத்தியமே இல்லையா? இப்படித்தான் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘இன்டெர்ஸ்டெல்லார்’ திரைப் படம் தொடங்குகிறது.
விண்ணுக்குக் குறுக்குப் பாதை
சில ஊர்களுக்கு, நாம் ரயிலில் பயணிக்கும்போது, ரயிலினுள் திடீரென்று இருட்டாகிவிடும். அப்போது நீண்ட குகைகளுக்குள் ரயில் செல்வதை உணரலாம். மலையைச் சுற்றிக்கொண்டு போனால், பயண நேரம் நீண்டுவிடும் என்பதற்காக மலையைக் குடைந்து ரயில் பாதையை அமைத்திருப்பார்கள்.
இப்படியான ஒரு குறுக்குப் பாதை நம் பிரபஞ்சத்தில் இருந்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயணிக்காமல், மிகத் தொலைவில் இருக்கும் விண்வெளிப் பகுதிக்குச் சீக்கிரம் சென்றுவிடலாம் இல்லையா? நம் பிரபஞ்ச வெளியில், அப்படி ஒரு குறுக்குப்பாதையை ஏற்படுத்தித் தருவதுதான், காலவெளிச் சுரங்கங்கள் (Wormhole).
எடுத்துக்காட்டாக, காகிதத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஓர் எறும்பு நடந்து செல்ல, ஒரு நிமிடம் ஆகும் என வைத்துக்கொள்வோம்.
அந்தக் காகிதத்தை இரண்டாக மடியுங்கள். இப்போது மறுமுனை, முதல் முனையின் கீழ் வந்துவிடும். மேலி ருந்து கீழாக ஒரு துளையிடுவோம். இப்போது எறும்பு சுலபமாக, துளையின் வழியாக சில நொடி களில் கீழே மறுமுனைக்கு வந்து விடும். இதுதான் காலவெளி சுரங்கத்தின் அடிப்படை.
ஐன்ஸ்டைன்-ரோசன் பாலம்
கருந்துளைகள் போன்ற அதிக நிறையுள்ள பிரபஞ்ச பொருள்கள், காலவெளியை ஒரு ஆழமான புனல் வடிவத்தில் கீழ்நோக்கி வளைக்கின்றன. அதே
நேரத்தில், பிரபஞ்சத்தின் மற்றொரு பகுதியில், இதற்கு நேர்மாறாக மேல்நோக்கிய ஒரு வளைவு ஏற்படுவதாகக் கொள்வோம்.
இந்த இருவேறு வளைவுகளும் விண்வெளியின் ஈர்ப்புவிசை அழுத்தத் தால் ஒன்றை மற்றொன்று தொட்டுக்கொண்டு, அவற்றுக்கு இடையே ஒரு சுரங்கம் போன்ற திறப்பு உருவாகும்.
அதுதான் காலவெளிச் சுரங்கம். சுரங்கத்தின் ஒரு முனையில் உள்ளே சென்றால், அடுத்த கணமே பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் மறுமுனை வழியாக வந்துவிடலாம்.
இந்தக் கோட்பாட்டை ஐன்ஸ்டைன், இயற்பிய லாளர் நாதன் ரோசனுடன் இணைந்து 1935இல் உருவாக்கினார். இது ‘ஐன்ஸ்டைன்-ரோசன் பாலம்' (Einstein-Rosen Bridge) எனப்படுகிறது.
ஆனால், உண்மையாகவே இப்படி ஓர் அமைப்பு உருவானால் குறுகிய நேரத்தில் இவை மூடப்பட்டுவிடும். நிலை யாகத் திறந்திருக்க ‘எதிர்மறை ஆற்றல்' அல்லது அயல் பருப்பொருள் (Exotic Matter) தேவைப்படும்.
அல்குபியர் டிரைவ்
மெக்சிக இயற்பியலாளர் மிக்வெல் அல்குபியர் 1994இல் ‘அல்குபியர் டிரைவ்’ (Alcubierre Drive) எனும் கோட்பாட்டை முன்மொழிந்தார். இதன்படி விண்கலத்தைச் சுற்றி ஓர் ‘ஆற்றல் குமிழ்' (Warp Bubble) உருவாக்கப்படும். அது விண்கலத்துக்கு முன்னால் உள்ள காலவெளியைச் சுருக்கும், பின்னால் உள்ள காலவெளியை விரிவடைய வைக்கும்.
இந்தச் சுருக்கத்தாலும் விரிவாக்கத் தாலும், விண்கலத்தைச் சுற்றியிருக்கும் காலவெளி ஒட்டுமொத்தமாக முன்னோக்கித் தள்ளப்படும். காலவெளியே நகர்வதால் விண்கலமும் தானாகவே முன்னோக்கிச் செல்லும். ஆனால், ‘அல்குபியர் டிரைவ்’ செயல்பட மாபெரும் ஆற்றல் தேவைப்படும்.
காலவெளி சுரங்கமும் அல்குபியர் டிரைவும் ஐன்ஸ்டைனின் பொது சார்பியலின் அடிப் படையில், பிரபஞ்சத்தின் தூரங் களை, ஒளியைவிட வேகமாகக் கடக்க முன்வைக்கப்பட்ட கணிதத் தீர்வுகள்.
ஆனால், நடைமுறையில் தற்போதைக்கு சாத்தியமற்றவை. எதிர்காலத்தில் மனிதகுலம் எதிர்மறை ஆற்றலையும், காலவெளியைக் கையாளும் தொழில்நுட்பங் களையும் கண்டுபிடிக்கும்போது, பிரபஞ்சத்தில் பெரும் தூரங்களை எளிதாகக் கடக்கலாம்.
சரி ‘இன்டெர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தில், வெகு தூரத்திலிருக்கும் மற்றொரு விண்வெளிப் பகுதிக்கு கூப்பரும் குழுவினரும் எப்படிப் பயணித்தார்கள்? பூமியிலிருக்கும் மனித இனத்தைக் காப்பாற்ற, வேறொரு பரிமாணத்தில் இருக்கும் மனிதர்கள், சனிக்கோளுக்கு அருகில் ஒரு காலவெளி சுரங்கத் தைச் செயற்கையாக உருவாக்கி வைத்திருப்பார்கள். அதன் வழியேதான் கூப்பரும் குழுவினரும் பயணிப்பார்கள்.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com