வெற்றிக் கொடி

அதிகம் செலவிட்டால் கல்வித் தரம் உயருமா?

‘கலகல வகுப்பறை’ சிவா

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன், கணிதம், அறிவியல் முதலான பாடப்பிரிவுகளில் அவர்கள் கற்றதை நிஜ வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை மதிப்பிடும் பிசா (PISA) ஆய்வு உலகளவில் நடத்தப் படுகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பால் (OECD) நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய சர்வதேச மாணவர் மதிப்பீடு இது. இதன்படியே பல்வேறு நாடுகளின் கல்வியமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

கடந்த 2025இல் நடைபெற்ற பிசா ஆய்வில் 96,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்கள் படிக்கும் வகுப்பை அடிப்படையாக வைக்காமல் 15 வயது நிரம்பியவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

முன்னதாக அடிப்படை கற்றல் புரிதலைத் தாண்டி நவீனக் கருவிகளின் பயன்பாடு, இணைய வளங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பள்ளிச் சூழல், பெற்றோர், ஆசிரியர் பங்கேற்பு போன்ற பலவற்றைக் குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டன.

நமக்கான படிப்பினை

தகவல்களைப் புரிந்துகொள்ளுதல், மதிப்பிடுதல், காரணம் - விளைவு குறித்து விவாதித்தல், பல தீர்வுகளுள் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தல் போன்றவையே இந்த ஆய்வின் அடிப்படை.

இந்தியா இதில் பங்கேற்கவில்லை. இருப்பினும் இதிலிருந்து நமக்கு ஏராளமான படிப்பினைகள் கிடைக்கின்றன.

முதல் பத்து இடங்களுக்குள் ஆசிய நாடுகள் பலவும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், பல்வேறு கூறுகளைத் தனித்தனியாகப் பார்க்கும்போது சில நாடுகளில் பள்ளிச் சூழல், மாணவரிடையே ஒற்றுமை, தொழில்நுட்பம், இணையப் பயன்பாடு ஆகியவற்றில் பெரிதும் கவனம் வைக்க வேண்டியது அவசியம் என்பது புலப்படுகிறது. ஒட்டுமொத்தத் தரவரிசையைவிட, தனித்த தகவல்களும் ஒப்பீடுகளுமே முக்கியம் என்பதே இதன் சாராம்சம்.

அதிர்ச்சிகர முடிவுகள்

இதுவரை இல்லாத அளவில், உலகளவில் கல்வித்தரம் குறைந்துவருகிறது என்பது பேரதிர்ச்சி தரும் செய்தி. வாசித்தல், வாசித்தவற்றில் இருந்து தகவல்களை இணைத்துப் புரிந்துகொள்ளுதல், விமர்சன பூர்வமாகச் சிந்தித்தல், தனது கருத்துகளை வெளிப்படுத்துதல் போன்ற திறன்கள் கவலை தரத்தக்க அளவில் வெகுவாகக் குறைந்துள்ளன.

உரைகளை மேம்போக்காக வாசித்துத் தவறான பதில் சொல்வதாக வாசிப்பு மாறியிருப்பது அவலம். இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, சமூகத்தில் பொதுவாகவே அனைவரிடமும் வாசிப்பு குறைந்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு

ஏஐ பயன்பாடு குறித்து இதில் விரிவான கேள்விகள் இடம்பெற்றன. வினாக்களுக்கு விடை தேடுவதாக மட்டுமல்லாமல் சிந்திக்கவும் கற்கவும் உதவுவதாக ஏஐ பயன்பட வேண்டும் எனும் கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

ஏஐ சொல்வதை அப்படியே நம்பும் போக்கு ஆபத்தானது என முடிவில் சுட்டிக்காட்டப்பட்டது. மின்னணு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவது கற்றலுக்குத் தடையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

தேர்வுகளின் தரம்?

வேறு சில சிந்திக்கத்தக்க புள்ளிகளை பிசா அறிக்கை தொட்டுக்காட்டுகிறது. கரோனாவுக்குப் பிறகுதான் கல்வி சீரழிவை நோக்கி விரைகிறது என்பது உண்மை இல்லை. அதற்கு முன்பிருந்தே தரத்தில் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்கிறது. கல்விக்கு மிக அதிகமாகச் செலவு செய்தால் கல்வித்தரம் உயரும் என்பது உண்மையல்ல.

ஒரு மாணவருக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைவிடச் சிறந்த கொள்கைகளும் அறிவுபூர்வமான செலவுகளுமே கற்றல் விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. குறைவாகச் செலவு செய்யும் பல நாடுகளில் கல்வித்தரம் உயர்வாகவே இருக்கிறது.

கொள்குறி வினா வகைத் தேர்வுகள் மூலம் மாணவர்களின் திறனை மதிப்பிடுவது முற்றிலும் சரியானது அல்ல என்கிற முடிவுக்குப் பல நாடுகள் வந்துள்ளன. திறன்களுக்கு ஏற்ற தொடர் மதிப்பீட்டு முறைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.

அவசியமான தொழில்நுட்ப வசதிகளோடு ஆசிரியரின் வழிகாட்டலும் உள்ள நாடுகளின் கல்வித்தரம் உயர்வாக இருக்கிறது. உலகமெங்கும் கல்வியில் பெற்றோரின் தலையீடு வெகுவாகக் குறைந்திருப்பதை இந்த ஆய்வு வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.

இந்த அறிக்கை கண்ணாடிகளையும் ஜன்னல்களையும் தந்திருக்கிறது. கண்ணாடி மூலம் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். ஜன்னல்கள் மூலம் பிற நாடுகளின் சிறப்பான செயல்பாடுகளை அறிந்துகொள்ளலாம். இந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் தங்கள் நாட்டுக் கல்வி முறை குறித்த காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

(தொடர்ந்து பேசுவோம்)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT