பள்ளியின் பொன்விழா கொண்டாட்டம் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்யத் தொடங்குகின்றனர்.
கலை யாசிரியர் அறிவழகன் நாடகத்தில் மாணவர்கள் நடிப்பதற்கான முன்னெடுப்புகளைச் செய்கிறார். பேச்சு, கட்டுரை, தனிநபர் நடிப்பு ஆகியவற்றில் கலந்துகொண்டு ஏற்கெனவே பல பரிசு களை வென்றவன் ஆதவன்.
அந்தப் பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்பில் புதிதாக வந்துசேர்ந்தவன். நாடகத்தில் நடிக்கப் பயிற்சி எடுக்கப் பள்ளியின் கலையரங் கத்துக்கு மாணவர்கள் வருகின்றனர்.
அவர்களை ஆசிரியர் அறிவழகன் வட்டமாக உட்காரச் சொல்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை நாடகமாக நடிப்பதற்கு முன் வீரபாண்டியன் கதையைச் சொன்ன இரண்டு புத்தகங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.
வட்டமாகப் பயில்
ஒன்று தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் எழுதிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, மற்றொன்று பேராசிரியர் நா.வானமாமலை எழுதிய ‘வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்கள்’.
இரண்டு நூல்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். மாணவர்களிடம் நாடகப் பிரதியைக் கொடுத்து வசனங்களை வாசிக்கச் சொல்கிறார். ஆதவன் கட்டபொம்மன் கதாபாத்துக்குப் பொருத்தமானவன் என்று அவனுக்குப் பயிற்சிக் கொடுக்கிறார்.
மாணவர்களுக்குக் கதாபாத்திரங்களைப் பிரித்துக் கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும் நாடகத்துக்கான ஒத்திகை நடைபெறுகிறது. நாடகத்தில் ஏன் மாணவர்கள் வட்டமாக அமர்ந்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்னும் கேள்வியைக் கேட்கும்போது, அதற்குக் காரணமாக இருந்தவர் ஞானி என்கிறார் ஆசிரியர்.
வட்டமாக உட்கார்ந்தால் நாடகத்தில் அனைவரின் முகம் பார்த்துப் பேச முடியும். முடிவும் இல்லை, தொடக்கமும் இல்லை. எல்லாரும் சமம் என்பதை நாடக ஒத்திகையில் கடைப்பிடித்தவர் ஞானி. அதை நாமும் பின்பற்றுவோம் என்கிறார் ஆசிரியர்.
அதிர்ச்சி ஊட்டிய கேள்வி
ஒருவாரம் நாடகத்துக்கான ஒத்திகை சிறப்பாக நடைபெறுகிறது. நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங் களை மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவழகன் கற்பிக்கிறார். மேடை ஏற இன்னும் இரண்டு நாள்களே உள்ளன.
‘இடம்’ - சிறார் நாவல்
ஆசிரியர்:விஷ்ணுபுரம் சரவணன்
சால்ட் பதிப்பகம்
தொடர்பு எண்: 9363007457
ஒத்திகை தொடங்கியது. மாணவர்கள் ஒவ்வொரு காட்சியாக நடித்துக் காட்டுகின்றனர். ஆதவன் உணர்வுப்பூர்வமாக நடிக்கிறான். போர்க்களக் காட்சியில் ஆதவன் நடிக்கும்போது ஆசிரியருக்கு நெருடலாக இருக்கிறது. ஆதவனிடம் கேட்கிறார். “நீ இடது கை பழக்கம் உடையவனா?” அந்தக் கேள்வி ஆதவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
“அருமையாக நடிக்கிறாய். ஆனால், வீரபாண்டியக் கட்டபொம்மன் இடது கையால் வாளை எடுத்து வீசுவது பொருத்தமாக இல்லை. தலைமையாசிரியரும் வேறொரு மாணவனை கட்டபொம்மன் கதாபாத்திரத்துக்குத் தயார் செய்யச் சொல்கிறார்” எனக் கூறியதும் ஆதவனின் கண்கள் கலங்குகின்றன.
வலது கைப்பழக்கம்தான் இயல் பானதா? இடதுகை பழக்கத்தினால் சிறுவயது முதல் பல அவமானங்களை எதிர்கொண்டவன். திறமையாக நடித்தும் நாடகத்தில் ஒதுக்கப்படும்போது, அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
‘இடம்’ மறுக்கப்படுவோர்
அதே பள்ளியில் படிக்கும் இடது கை பழக்கம் உள்ள மற்ற மாணவர்கள் ஆதவனைச் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். தங்களின் இடது கை பழக்கத்தினால் பள்ளி நிகழ்ச்சிகளில் நீக்கப்பட்டது குறித்துப் பகிர்ந்து கொள்கின்றனர்.
அவர்கள் இணைந்து இடது கை பழக்கம் உள்ளவர்களின் பிரச்சினைகளை எடுத்துச்சொல்லக் கையெழுத்து இதழ் ஒன்றைத் தொடங்க முடிவுசெய்கின்றனர். நாடகம் நடைபெறும் நாளும் வந்தது.
எதிர்பாராத விதமாக ஆதவனே அந்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறான். சிறந்த நடிப்புக்கான கோப்பையை ஆதவனுக்கு மாவட்ட ஆட்சியர் இடது கையால் வழங்குகிறார். ஆதவனும் இடது கையால் கோப்பையைப் பெற்றுக்கொள்கிறான். கையெழுத்து இதழுக்கு மாணவர்கள் வைக்கும் பெயர் ‘இடம்’.
சிறார் இலக்கியம், கட்டுரை உள்ளிட்ட வடிவங்களில் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய விஷ்ணுபுரம் சரவணனின் ‘இடம்’ சிறார் நாவலின் கதை
இது. நாவல் முழுவதும் ஆதவன் இடதுகை பழகத்தை நினைத்து வருந்துவது வாசகர் களைக் கலங்க வைக்கிறது.
வண்டியை ஓட்டும்போதும், சுவர் ஓரமாக அமர்ந்து இடது கையால் தேர்வு எழுதும் போதும், கணினியில் மவுஸ் பயன்படுத்தும் போதும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
பண்பாட்டு ரீதியிலும் இடது கை பழக்கம் உள்ளவர்களை அவமானப் படுத்தும் போக்கு உள்ளது. பெண்கள் என்றால் கூடுதலான வசை. ‘இடம்’ நாவல் இடது கை பழக்கம் உள்ளவர்களை இயல்பானவர்களாகப் பார்க்கச் சொல்கிறது.
- கட்டுரையாளர்: அரசுப் பள்ளி தமிழாசிரியர், வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்; devavino86@gmail.com