வெற்றிக் கொடி

கற்றலில் பள்ளியின் இடம் எது?

என்.மாதவன்

ராஜா, மாணவர்களுடன் அடிக்கடி சண்டையிடும் மாணவன். ஆசிரியர்களின் கண்டிப்பு, தண்டிப்பு என அவனது வாழ்க்கை நகர்ந்தது.

கடைசி பெஞ்சே கதி. நாட்டின் முதல் சுதந்திர நாள் விழாவில் ஆசிரியர் கமலம் பாடினார். நிகழ்ச்சி முடிந்ததும், ‘நீங்க நல்லா பாடினீங்க மிஸ்’ என ராஜா பாராட்டினான்.

‘எந்த வகுப்புப் படிக்கிறாய்?’ என கமலம் கேட்க, ‘நான்காம் வகுப்பு பி’ என்றான். ‘அடுத்த மாதம் நான் உங்க வகுப்புக்கு வருவேன்’ என்றார் கமலம்.

அதுபோலவே நான்காம் வகுப்புக்கு வரத் தொடங்கியவர் ராஜாவின் நல்ல செயல் களைப் பாராட்டித் தட்டிக்கொடுத்தார்.

கணக்கில் அவன் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். மெது வாகப் படிப்பில் அவன் ஆர்வம் காட்டினான்.

முதல் வரிசை பெஞ்சுக்கு வந்தான். கமலத்துக்குத் திருமண மாகவே வேலையை விட்டுச் சென்றார். மறுபடியும் ராஜா பின்வரிசைக்குச் சென்று விட்டான். சா.கந்த சாமியின், ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதையின் சுருக்கம் இது.

புரிந்தது, புரியாதது

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் எந்த அளவுக்கு உயிரோட்டமான கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறதோ அந்த அளவில்தான் மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பள்ளியில் அன்றாடம் பாடங்கள் நடத்தப் படுகின்றன. கற்பித்தலின் போதே மாணவர்களின் கற்றல் நிலை மதிப்பீடு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் பள்ளி அளவிலான தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

இவ்வாறான தேர்வுகள் மாணவர்களின் அறிவைச் சோதிப்பதாக அமைவதோடு, எந்தெந்தப்பாடப்பொருள்களை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர், எவற்றைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான அளவுகோலாகவும் ஓரளவு அமைகின்றன.

அதேபோல பாடம் நடத்தும் ஆசிரியர்களும் தாங்கள் கற்பித்தவற்றில் எவை எல்லாம் மாணவர்களுக்கு நன்றாகப் புரிந்தன, எவை எல்லாம் புரியவில்லை என்பதை உணர்கின்றனர்.

இதன்மூலம் அவர்கள் தங்களின் கற்பித்தல் உத்திகளை மாற்றி வடிவமைத்துக் கொள்ளத் தேர்வுமுறைகள் உதவுகின்றன.

அந்த வகையில் குறிப்பிட்ட வகுப்புவரை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உயிரோட்டமான தொடர்புகளைப் பள்ளி அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

அதேநேரம் அரசு வரையறுக்கும் கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவை முழுமையாகக் கடத்தப்படுகிறதா என்பதைக் கல்வித் துறை சோதித்து அறிவது எப்படி?

சுதந்திர வெளி

பொதுவாகக் குளிரூட்டப்பட்ட ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறைகள், பெரிய வளாகம் கொண்ட பள்ளிக் கூடங்கள் சிறந்த முறையில் பாடப்பொருளைப் பயிற்றுவிக்கும் கல்வி நிலையங்கள் என நம்பப்படுகின்றன.

உண்மையில், பள்ளி நிர்வாகமானது கற்பிக்க வேண்டிய பாடப்பொருளின் பட்டியலைத்தான் அளிக்கிறது. அந்தப் பட்டியலில் சில விஷயங்கள் ஆசிரியர்களால் கடத்தப்பட்டிருக்கும். அவ்வாறான விஷயங்களை உள்ளார்ந்து உணர்வதன் மூலம் மாணவர்களுக்கு ஆர்வம் கூடும்.

அந்த ஆர்வ மிகுதி அடுத்தடுத்து விஷயங் களை மென்மேலும் கற்பதற்கு மாணவரை உந்தித்தள்ளும். இப்படியான தேடுதலை மாண வர்கள் தொடர்வதற்கான நிரந்தர ஏற்பாடுதான் பள்ளிக்கூடம்.

அந்த வகையில் பொதுத் தேர்வானாலும் போட்டித் தேர்வானாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய இடமாகப் பள்ளியும் வகுப்பறையும் அமைய வேண்டும். அதற்கு ஆசிரியர்-மாணவர் உயிரோட்டமான கலந்துரையாடல்களுக்குச் சுதந்திரமான வெளியை உருவாக்க வேண்டும்.

- கட்டுரையாளர்: பள்ளித் தலைமையாசிரியர்; thulirmadhavan@gmail.com

SCROLL FOR NEXT