ஆங்கில சொல் ‘Physics’, பண்டைய கிரேக்க மொழியின் ‘Physis’ சொல்லில் இருந்து உருவானது. ‘Physis’ என்றால் இயற்கை. இதை ஒட்டியே தமிழிலும் ‘இயற்பியல்’ எனும் சொல் மிகப்பொருத்தமாக உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் மிக முக்கிய நோக்கம் இயற்கையில் உள்ளதை அறிதல்.
முதன்முதலில் கண்ணாடியைப் பார்க்கும் குழந்தை, அதில் தெரியும் உருவம் யார் எனப் புரியாமல் அதைத் தொட்டுப் பார்க்கிறது. சிறிது காலத்துக்குப் பிறகு, அந்தக் கண்ணாடியில் தெரியும் உருவம், ‘தான்’தான் என்பதை உணர்கிறது. மனிதர்களின் இயற்பியல் பயணமும் இதைப் போன்றதே.
காலந்தோறும் இயற்பியல்
ஒரு காலத்தில், பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பினோம். கோப்பர்னிகஸ் அந்த நம்பிக்கையை மாற்றினார். பின்னர், பூமியில் கீழே விழும் ஆப்பிளும், வானில் சுற்றும் நிலவும் ஒரே ஈர்ப்பு விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன என நியூட்டன் காட்டினார்.
அதுவரை தனித்தனியாகத் தோன்றிய வானமும் பூமியும் ஒரே இயற்கையின் விதியால் இணைக்கப்பட்டன. அதன் பிறகு மின்சாரமும் காந்தமும் இரண்டு வெவ்வேறு விசைகள் அல்ல, ஒரே மின்காந்த விசையின் (Electromagnetic Force) இரண்டு முகங்கள் என ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நிரூபித்தார்.
பின்னர் வந்த ஐன்ஸ்டைனோ, இடமும் காலமும் தனித்தனியாக இல்லை, அவை வெளி-காலம் (Space-Time) எனும் ஒரே அமைப்பு என விளக்கினார். மேலும், இயற்பியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய E = mc2 என்கிற சமன்பாட்டின் மூலம், நிறையும் ஆற்றலும் ஒன்றுக்கு மற்றொன்று பரிமாற்றம் அடையக்கூடியவை என்றார்.
குவாண்டம் சந்திப்பு
அணுக்களை ஆராய்ந்தால், அவை துகள்களால் ஆனவை எனத் தெரிகிறது. துகள்களை இன்னும் ஆழமாகப் பார்த்தால், அவை குவாண்டம் புலங்களின் (Quantum Fields) அலைவுகளாகத் தோன்றுகின்றன. நம்முடைய மூன்றாம் பரிமாணத்தைத் தாண்டி பதினோரு பரிமாணங்கள் இருப்பதாகக் கோட்பாடுகள் எடுத்துரைக்கின்றன.
பெரு வெடிப்பிலிருந்து தொடங்கிய பிரபஞ்சம் இன்னும் விரிந்துகொண்டிருப்பதை உறுதிப் படுத்தியது இயற்பியல். என்னவென்றே புலப்படாத, கரும் பொருளும் (Dark Matter), புலப்படாத ஆற்றலும் (Dark Energy) பிரபஞ்ச செயல் பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கருந்துளைகளை ஆராயும்போது தகவல், ஈர்ப்பு விசை, குவாண்டம் இயற்பியல் ஆகியவை ஒன்றாகச் சந்திக்கின்றன. இவற்றையெல்லாம் முழுமையான உண்மையாகப் பார்க்கும் முயற்சியில்தான், இயற்பியல் துறை இப்போது இருக்கிறது.
இயற்பியலைப் பொறுத்தவரை புதிய உண்மைகளை மட்டும் நாம் கண்டறியவில்லை. துண்டு துண்டாகக் கிடந்த உண்மைகளைக்கூட, ஒன்றோடு மற்றொன்று இணைத்து பெரிய முழுமையை நோக்கி நகர்ந்திருக்கிறோம். ஆனால், அந்த முழுமையின் முழு வடிவம் இன்றளவும் நம் கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை.
இயற்பியலின் இந்தத் தேடல், பிரபஞ்சத்தைப் பற்றிய தேடல் மட்டுமல்ல. நம்மைப் பற்றிய தேடலும்கூட. நம் உடலில் இருக்கும் கார்பன், ஆக்சிஜன், இரும்பு போன்ற அணுக்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, வெடித்துச் சிதறிய விண்மீன்களிடம் இருந்தவை.
பிரபஞ்சத்தின் தொடர்ச்சி!
தொடக்கத்தில் இயற்கையைக் கவனித்து, அதன் இயல்பை அறிவது இயற்பியலாக இருந்தது. பிறகு இயற்பியலின் பரிணாம வளர்ச்சி ஒரு முக்கிய உண்மையை நமக்கு உணர்த்தியது. நாம் இயற்கையைக் கவனித்து அளவிடும்போது, இயற்கை அதன் இயல்பை மாற்றியது.
நாம் கவனிக்கும்வரை, பல்வேறு சாத்திய நிலைகளில் இருக்கும் எலெக்ட்ரான், நாம் கவனித்தபின், ஒரே சாத்தியமாகச் சுருங்கியது. இதனால், கவனிக்கும் நாமும் கவனிக்கப்படும் இயற்கையும் வெவ்வேறானவையா அல்லது நம்முடைய கவனித்தலும், அளத்தலும் இயற்கையின் ஒரு பகுதியா என்கிற கேள்வி இன்றுவரை இயற்பியலின் மிக ஆழமான விவாதங்களில் ஒன்றாகவே உள்ளது.
இதைத்தான் வானியலாளர் கார்ல் சாகன் அழகாக ஒரு வரியில் சுருக்கினார், ‘பிரபஞ்சம் தன்னைத்தானே அறிந்துகொள்ள உருவாக்கிய வழிகளில் ஒன்று மனிதர்கள்’. இதன் பொருள் மனிதர்கள் பிரபஞ்சத்தின் மையம் என்பதல்ல. மாறாக, ‘மனித இனம் பிரபஞ்சத்தின் தொடர்ச்சி' என்பதாகும். நம்முடைய சிந்தனை, ஆர்வம், கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவது, இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் நீண்ட பரிணாமப் பயணத்தின் புதிய வெளிப்பாடுகள்.
இயற்பியல் நமக்குச் சொல்லும், மிகப்பெரிய பாடம் என்னவென்றால், நாம் நினைப்பதைவிட ஒன்றுடன் மற்றொன்று இயற்கை அதிகமாக இணைந்திருக்கிறது என்பதுதான். நாம் தனித் தனியாகப் பார்ப்பதை எல்லாம், இயற்கை முழுமையாக்குகிறது. நாம் வரையும் எல்லைகளை அழித்து, அனைத்தையும் ஒன்றாக்குகிறது.
எனவே, இயற்பியலின் இறுதிப்பயணம் என்பது ஓர் ‘இறுதித்துகளை’யோ அல்லது ‘அனைத்துக்குமான கோட்பாட்டை’யோ கண்டறிவது மட்டுமல்ல. மனிதன், இயற்கை, காலம், வெளி, பொருள், ஆற்றல், உணர்வு ஆகிய அனைத்தும், ஒரே பெரும் உண்மையின் வெவ்வேறு வெளிப்பாடு கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கான பயணமும்கூட.
(நிறைவடைந்தது)
- sujaaphoenix@gmail.com