மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), சிவில் சர்வீஸ் முதல்நிலை (Preliminary) தேர்வை ஜூன் 5-ம் தேதி (இன்று) நடத்துகிறது. தேர்வு காலண்டர் அடிப்படையில் முதன்மை (Main) தேர்வு வரும் செப்.16-ம் தேதி நடைபெறும். அதற்கேற்ப, தேர்வர்கள் எப்போதும் தயாரிப்பில் முனைப்புடன் இருக்க வேண்டும். முதல்கட்ட தேர்வுக்கு பிறகு, முதன்மை தேர்வுக்கு 3 மாத அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே, முதல்நிலை தேர்வை எழுதியவர்கள் அதன் முடிவுக்காக காத்திருக்காமல், முதன்மை தேர்வுக்கான தயாரிப்பை தொடர வேண்டியது அவசியம்.
மத்திய அரசு எடுத்த முடிவின்படி, எழுத்து தேர்வு, நேர்காணலில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை பொது இணையதளங்களில் ஆணையம் வெளியிடும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணல்/ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ளும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் நிறைவாக, நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்படாதவர்களின் மதிப்பெண் விவரம் இவ்வாறு வெளியிடப்படும்.
இத்தகவல்களை பொது மற்றும் தனியார் ஆள்சேர்ப்பு முகவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். சிவில் சர்வீஸ் பணிக்கு பரிந்துரை செய்யப்படாத தேர்வர்களுக்கு இதன்மூலம் பிற வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
முதன்மை தேர்வில் 9 தாள்கள்
மெயின் தேர்வுக்கு மொத்தம் 9 தாள்கள் உள்ளன. ஏதேனும் ஒரு இந்திய மொழி மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவை அடிப்படை தகுதித் தாள்கள். இந்த 2 தாள்களும் 10-ம் வகுப்பு பாடத்திட்ட நிலையில் உள்ளவை.
தாள்-A (அரசியலமைப்பு சட்டத் தின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் இருந்து விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கும் ஒரு இந்திய மொழி). 300 மதிப்பெண்கள்
தாள்-B ஆங்கிலம் - 300 மதிப்பெண்கள்
இந்த 2 தாள்களில் பெறும் மதிப்பெண்கள் தரவரிசைக்கு கணக்கிடப்படாது. ஆனால், கட்டுரை, பொதுத் தாள்கள் ஆகியவற்றில் ‘இந்திய மொழி’ தாளில் 25% மதிப்பெண், ஆங்கிலத்தில் 25% மதிப்பெண் பெறுபவர்களின் படிப்புகள், விருப்பப் பாடங்கள் மட்டுமே குறைந்தபட்ச தகுதித்தரங்களாக எடுத்துக் கொள்ளப்படும்.
தகுதிக்காக கணக்கிடும் 7 தாள்கள்
தாள் I முதல் VII வரை விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே தகுதி தரவரிசைக்கு கணக்கிடப்படும். எனினும், இந்த தாள்களில் ஏதேனும் அல்லது எல்லாவற்றிலும் தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க ஆணையத்துக்கு உரிமை உண்டு.
தாள்-I: கட்டுரை - 250 மதிப்பெண்கள். பல தலைப்புகளில் கட்டுரைகள் எழுத வேண்டி இருக்கலாம். அவர்கள் தங்கள் யோசனைகளை ஒழுங்கான முறையில் ஒழுங்கமைத்தும், சுருக்கமாகவும் எழுதுவது அவசியம். பயனுள்ள கருத்தை தெளிவாக, துல்லியமாக வெளிப்படுத்துவது மதிப்பெண்களை பெற்றுத் தரும்.
தாள்-II: பொது ஆய்வுகள் (General Studies)-I (இந்திய பாரம்பரியம், கலாச்சாரம், உலக, சமூகவரலாறு, புவியியல்) - 250 மதிப்பெண்கள்.
தாள்-III: பொது ஆய்வுகள்-II (ஆட்சி, அரசியலமைப்பு, அரசியல், சமூக நீதி, சர்வதேச உறவுகள்) - 250 மதிப்பெண்கள்.
தாள்-IV: பொது ஆய்வுகள்-III (தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, உயிரியல் பன்முகத் தன்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை) - 250 மதிப்பெண்கள்
தாள்-V: பொது ஆய்வுகள்-IV (நெறிமுறைகள், நேர்மை மற்றும் தகுதி) - 250 மதிப்பெண்கள்.
இத்தாளில் தேர்வரின் நேர்மை, பொது வாழ்வில் நன்னடத்தை, சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், மோதல்கள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் அணுகுமுறை ஆகியவற்றை சோதிக்கும் கேள்விகள் இருக்கும். இந்த அம்சங்களை தீர்மானிக்க, ‘Case Study Approach’ அணுகுமுறையை பயன்படுத்தலாம்.
விருப்பப் பாடம்
முதன்மை தேர்வுக்கான விருப்ப பாடங்கள் 2 தாள்களைக் கொண்டது. அதற்கு, கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம் அதன் விவரம்:
விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், மானுடவியல், தாவரவியல், வேதியியல், சிவில் இன்ஜினீயரிங், வணிகம் மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், வரலாறு, சட்டம், மேலாண்மை, கணிதம், இயந்திர பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல், மொழிகள்.
இதில் மொழிகள் பாடப் பிரிவில் அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியின் இலக்கியம்:
தாள்-VI: விருப்ப பாடம் - முதல் தாள் - 250 மதிப்பெண்கள்
தாள்-VII விருப்ப பாடம் - 2-ம் தாள் - 250 மதிப்பெண்கள்.
மேற்கண்ட 7 தாள்களையும் தமிழிலேயே எழுதலாம். நேர்காணலிலும் தமிழிலேயே பதில் அளிக்கலாம்
மதிப்பெண் விவரம்:
எழுத்து தேர்வு - 1,750
ஆளுமை சோதனை - 275
மொத்தம் - 2,025
(அடுத்த பகுதி சனிக்கிழமை வரும்)
போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.