பார்வையற்ற ஆறு பேர் ஒரு யானையைச் சந்திக்கிறார்கள். அவர்க ளுக்கு அதுவரை யானையை முழுமையாகத் தெரியாது. ஒருவர் காலை தொட்டு, "தூண் போலிருக்கிறது” என்கிறார். இன்னொருவர் தும்பிக்கையைத் தொட்டு, “பாம்பு போலிருக்கிறது!” என்கிறார்.
மூன்றா வது நபர் காதை தடவி, “முறம்” என்கிறார். நான்காவது நபர் வாலை இழுத்து, “கயிறு போல இருக்கிறது” என்கிறார். இன்னொருவர் வயிற்றைத் தொட்டு, “சுவர் போல இருக்கிறது” என்கிறார்.
ஆறு பேரும் தங்கள் விடை சரிதான் என்று வாதிட்டார்கள். உண்மையில் அவர்கள் குறிப்பிட்டது அனைத்துமே யானையைத்தான் அல்லவா? இது போலதான், 1995 வரை ‘சரக்கோட்பாடு’ (String Theory) ஐந்து வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தது.
இயற்பியலாளர்கள் பிரபஞ்சத்தின் அடிப்படையை விளக்க ஐந்து விதமான சரக்கோட்பாடுகளை உருவாக்கி னார்கள். ஒவ்வொன்றும் கணிதரீதியாகச் சரியாக இருந்தது. ஆனால், ஒன்றுக்கொன்று முரண்பட்டது போலத் தோன்றின.
‘எம்-கோட்பாடு’
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 1995இல் நடந்த மாநாட்டில், கோட்பாட்டு இயற்பியலாளர் எட்வர்ட் விட்டன் ஐந்து சரக்கோட்பாடுகளையும் இணைத்து இந்த முரண்பாட்டுக்குத் தீர்வை முன்மொழிந்தார்.
இந்த ஐந்தும் தனித்தனி கோட்பாடுகள் அல்ல. ஒரே கோட் பாட்டின் ஐந்து வெவ்வேறு கோணங்கள் என்றார். அதுதான் ‘எம்- கோட்பாடு’ (M Theory). ஐந்து விதமான சரக்கோட்பாடுகளும் ஒரே ஒரு ‘11 பரிமாணக் கோட்பாட்டின்’ வெவ் வேறான கணிதப் பார்வைகள் என்பதை எட்வர்ட் விட்டன் நிரூபித்தார்.
எம்-கோட்பாட்டின்படி, ‘தி பல்க்' (The Bulk) எனப்படும் பதினோராவது பரிமாண வெளியில் எண்ணற்ற பிரபஞ்சங்கள் மிதக்கின்றன. இவ்வாறு மிதக்கும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பிரபஞ்சங்கள் ‘ப்ரேன்கள்' (Branes/ Membranes) என அழைக்கிறார்கள்.
நமது முப்பரிமாணப் பிரபஞ்சமும் அந்தப் பிரம்மாண்டமான பல்க் வெளியில் மிதக்கும் ஒரு ‘ப்ரேன்' மட்டுமே. சரி, பரிமாணங்கள் எப்படி இருக் கும்? பூஜ்ஜியப் பரிமாணம் என்பது நீளமும் அகலமும் இல்லாத ஒரு புள்ளி.
ஒற்றைப் பரிமாணம் என்பது நீளம் மட்டும் கொண்ட நேர்கோடு. இரண்டாம் பரிமாணம் தட்டையான பரப்பு. அதற்கு நீளமும் அகலமும் உண்டு. முப்பரிமாணம் நீளம், அகலம், ஆழம் ஆகிய மூன்றையும் கொண் டது. இதுபோல வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட பிரபஞ்சங்கள், இந்த 11ஆம் பரிமாண வெளியில், ப்ரேன்களாக மிதக்கின்றன.
மலரும் நாகரிகம்
ப்ரேனுக்கு மிக அருகில் இன்னொரு ப்ரேன் இருக்க லாம். அதில் இன்னொரு பிரபஞ்சம்கூட இருக்கலாம். இந்த நொடி அந்த ப்ரேனில் ஒரு நட்சத்திரம் வெடிக்கலாம், ஒரு நாகரிகம் மலரலாம், இன்னொரு நாகரிகம் அழியலாம்.
வேறு பரிமாணத்தில் இருப்பதால், நம்மால் அதைக் காண முடியாது. ஏனென்றால் நாம் மூன்றாம் பரிமாண ப்ரேனுக்குள் சிக்கியுள்ளோம். நமது ப்ரேனின் எல்லைகளைத் தாண்டி நம்மால் செல்ல முடியாது. ஆனால், ஒரே ஒரு விசை மட்டும் இந்த எல்லையைத் தாண்டக்கூடும் என்கிறது எம்-கோட்பாடு. அதுதான் ஈர்ப்புவிசை (Gravity).
இயற்பியலில் நான்கு அடிப்படை விசைகள் உள்ளன. மின்காந்த விசை, வலுவான அணுவிசை, வலுவற்ற அணுவிசை, ஈர்ப்புவிசை. இதில் முதல் மூன்று விசைகளும் நமது ப்ரேனுக்குள் கட்டுப்பட்டுள்ளன.
ஆனால், ஈர்ப்பு விசை மட்டும், நமது ப்ரேனின் எல்லைகளைத் தாண்டி பதினோராம் பரிமாண வெளிக்குள் கசிகிறது என்று கருதப்படுகிறது. இதனால்தான், மற்ற விசைகளுடன் ஒப்பிடும்போது ஈர்ப்புவிசை மிகவும் பலவீனமாகத் தோன்றுகிறது. அதேநேரத்தில், பிரபஞ்சங்களுக்கு இடையே தகவலைக் கடத்தக்கூடிய தூதுவனாகவும் அது செயல்படலாம்.
பிரபஞ்சம் தோன்ற..
‘எக்பைரோடிக்’ (Ekpyrotic) எனப்படும் எம்-கோட்பாட்டின் கிளைக் கோட்பாடு, இரண்டு ப்ரேன்கள் மோதியதால்தான் பெருவெடிப்பு (Big Bang) உண்டாகி பிரபஞ்சம் தோன்றியது என்கிறது.
அதாவது, நமது பிரபஞ்சத்தின் பிறப்பு என்பது இரண்டு உயர்-பரிமாண ப்ரேன்கள் மோதியதால் உருவானதாக இருக்கலாம். சில இயற்பியலாளர்கள், கருந் துளைகள், குவாண்டம் ஈர்ப்புவிசை, பிரபஞ்சத்தின் தொடக்க நிலையை விளக்குவதற்கான முக்கியத் திறவுகோலாக எம்-கோட்பாட்டைப் பார்க்கிறார்கள்.
இருந்தாலும், இது வரை அதற்கான நேரடி பரிசோதனை ஆதாரம் எதுவுமில்லை. ஆகவே, எம்-கோட்பாடு இன்றைக்கும் கணிதத்தின் சாத்தியக்கூறாகவே உள்ளது.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com