உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர். பஞ்சாப் மாகாணத்தில் (இன்றைய பாகிஸ்தான்) 1894 பிப்ரவரி 21-ம் தேதி பிறந்தார். 1921-ல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவியலில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். தான் பெற்ற கல்வியால் தாய்நாடு பயனுற இந்தியா திரும்பினார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரானார். அடுத்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கரும்பு ஆலைகளில் வீணாகும் சோகைகளை என்ன செய்வதென்று அறியாதிருந்தபோது அவற்றை கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறையை உருவாக்கினார்.
ராவல்பிண்டியில் இயங்கிய ஸ்டீல் பிரதர்ஸ் என்ற பெட்ரோலிய நிறுவனம், தனது தொழிலகப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியது. இதற்கும் கூழ்ம வேதியியலின் உதவியால் தீர்வுகண்டார். தேசிய வேதியியல் ஆய்வு மையம், தேசிய இயற்பியல் ஆய்வு மையம், கண்ணாடி, பீங்கான் தொடர்பான ஆய்வு மையம், எரிபொருள் ஆய்வு நிலையம் ஆகியவற்றை நிறுவினார்.
இந்தியா விடுதலை பெற்றதும் சி.எஸ்.ஐ.ஆர்-ன் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய அறிவியல் துறையையும் தொழில்துறையையும் இணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர்.