கைகளை கழுவாமல் சாப்பிடுதல், காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவாமல் உண்ணுதல், திறந்தவெளியில் மலம் கழித்தல், சுத்தம் பேணாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் மனிதர்களுக்கு குடற்புழுக்கள் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக சிறுவர்களுக்கு குடற்புழு நோய் தாக்கி ரத்தசோகை நோய் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் பரவலை தடுக்க ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக. 10-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க தினம் இந்தியாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் சுகாதார துறை சார்பில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது இந்நாளில் வழக்கம்.
இதுதவிர அங்கன்வாடிகளிலும் இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின்படி 24 கோடிக்கும் அதிகமான இந்திய குழந்தைகள் குடற்புழு நோயால் அவதிப்படுகிறார்கள். இத்தகைய சிறாரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் உடல் நலத்தை பாதுகாப்பதே இந்த நாளின் முக்கிய குறிக்கோளாகும்.