இன்று என்ன நாள்

ஜன.27: இன்று என்ன? - ஊழியர்களின் நலன் காத்த கோம்பர்ஸ்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவர் சாமுவேல் கோம்பர்ஸ். இவர் லண்டனில் 1850 ஜனவரி 27-ம் தேதி பிறந்தார். குடும்ப வறுமையால் 10 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, சுருட்டு தயாரிப்பவரிடம் உதவியாளர் ஆனார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து விவாத கிளப் ஆரம்பித்தார். கிளப் மூலம் பலரது அறிமுகம் கிடைத்தது. பின்னாளில் மேடைப் பேச்சாளராக மாறுவதற்கான பயிற்சிக்களமாகவும் இது அமைந்தது. 1864-ல்நியூயார்க் நகர சுருட்டுத் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்ந்தார்.

தொழிலாளர் நலனுக்காக குரல் கொடுத்தார். வேலைநிறுத்தம், பணி புறக்கணிப்பு போன்றவை தொழிலாளர்களின் ஆயுதங்கள் என்றார். ஊழியர்களின் பொருளாதார மேம்பாடு, அதிக ஊதியம், குறைவான பணி நேரம், பாதுகாப்பான பணிச் சூழல் ஆகியவற்றை தொழிலாளர்களுக்கு பெற்று தருவதே இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது.

பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆலோசகராக கலந்து கொண்டார். சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் இயற்கை வளங்கள், சமூகத்தில் சமமான வாய்ப்புகள் என்ற பொருளாதார தத்துவத்தை முழங்கிய செயல்வீரர் கோம்பர்ஸ்.

SCROLL FOR NEXT