உலக அளவிலான மக்கள்தொகை பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. தற்போதைய உலக மக்கள்தொகை 800 கோடி. இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, வங்க தேசம் ஆகியவை மக்கள்தொகை பெருக்கத்தினால் நீடித்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உணவு, நீர், சுற்றுச்சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றன.