‘என் வாழ்க்கையே எனது செய்தி’ என்பார் காந்தி. அதுபோல் வரலாற்றின் எந்தவொரு அடுக்கிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அவர் கொண்ட கொள்கையின் உறுதியும் தனது விடாப்பிடியான அறப்போராட்டமுமே மானுடம் பேசும் கதைகளாகும். காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.
இவர் லண்டனில் கல்வி பயின்று தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த போதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார். தன் வாழ்நாளில் ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண் அடிமைத்தனத்தை வலுவாக எதிர்த்தார். தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தவர் காந்தி.
காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. தனது தனித்துவத்தால் மக்களை ஈர்த்த காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்
இதே தினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி இந்திய தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.