இன்று இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதியாக இருக்கும் புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஃபிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1948-ல் இந்திய ஒன்றியத்துடன் இணைய வேண்டுமா அல்லது ஃபிரெஞ்சு அரசின் கீழ் தொடர வேண்டுமா என்று பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய ஃபிரெஞ்சு அரசுகள் ஒப்புக்கொண்டன.
இந்த பொது வாக்கெடுப்பு 1954 அக்டோபர் 18 அன்று கீழூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது. காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று வாக்களித்தனர். இதையடுத்து இந்த நான்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளுக்கிடையே கையெழுத்தானது. நவம்பர் 1 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.