நீர்வளத்துறை வல்லுநர் வா.செ.குழந்தைசாமி கரூர் வாங்கலாம்பாளையம் கிராமத்தில் 1929 ஜூலை 14-ம் தேதி பிறந்தார். அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்தார். கரக்பூர் ஐஐடியில் தொழில்நுட்ப பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு தமிழகம் திரும்பி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுப்பணியிலும் ஈடுபட்டார்.
1978-79-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், 1981-ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அதைத்தொடர்ந்து 1990-94 வரை புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பதவிவகித்தார். நீர்வளத்துறை ஆய்விலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு “குழந்தைசாமி மாதிரியம்” என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
இவர் தேவநேயப் பாவாணரிடம் தமிழ் கற்றதைப் பெருமிதத்துடன் சொல்வார். கவிஞர் குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதைகளை எழுதினார். எண்ணற்ற கட்டுரைகளை அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக பத்ம விருதுகளால் கவுரவிக்கப்பட்டார்.