இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐரோப்பிய எழுத்தாளர், ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் (தற்போதைய செக் குடியரசு) பிராக் நகரில் 1883 ஜூலை 3-ம் தேதி பிரான்ஸ் காஃப்கா பிறந்தார். தந்தை கட்டாயப்படுத்தியதால் சட்டம் பயின்றார். ஆரம்பத்தில் எழுத்தராகவும் பிறகு காப்பீடு நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்தார். மாலை நேரங்களில் எழுதினார். எழுத்துப் பணிக்கு இடைஞ்சலாக இருந்ததால், வேலையை ராஜினாமா செய்தார்.
நண்பர்களின் ஊக்கத்தால் முழுநேர எழுத்தாளராக மாறினார். 1917-ல் காசநோய், இன்ஃப்ளூயன்சாவால் தாக்கப்பட்டார். சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் ஹீப்ரு மொழியைக் கற்றார். உடல்நிலை மிகவும் மோசமடைந்த போதிலும், தொடர்ந்து எழுதினார். ‘எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நூலை எழுதி முடித்தார். 1925-ல் வெளிவந்த ‘தி ட்ரயல்’, ‘தி கேஸில்’ ஆகிய அவரது புதினங்கள் அதிகாரத்துக்கு ஆட்பட்ட உலகில் துயரங்களுக்கு உள்ளாகும் தனிமனிதர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தின. ‘தி ட்ரயல்’ நூலின் கையெழுத்துப் பிரதி 1988-ல் ஏலத்தில் விடப்பட்டது. ஜெர்மனியை சேர்ந்த புத்தக விற்பனையாளர் 20 லட்சம் டாலருக்கு அதனை வாங்கினார்.