உயிரி வேதியியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் கவுலேண்ட் ஹாப்கின்ஸ் இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் 1861 ஜூன் 20-ம் தேதி பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கைஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அறிவியல், மருத்துவம் பயின்றார். பட்டாம்பூச்சி இறக்கைகளின் நிறமியல் தன்மைகள் குறித்து ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விலங்குகள் உயிர் வாழவும், வளர்ச்சி அடையவும் புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, கனிமங்கள், தண்ணீர் மட்டுமல்லாது, வேறு சில முக்கியப் பொருட்களும் அவசியம் எனக் கண்டறிந்தார். அவற்றுக்கு ‘துணைபுரியும் உணவுக் காரணிகள்’ எனப் பெயரிட்டார். இவையே பின்னர் ‘வைட்டமின்கள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. முதல் உலகப்போர் நடந்த நேரத்தில் உணவுப் பொருள் பற்றாக்குறை நிலவியதாலும், உணவுப் பொருட்களைப் பங்கிட்டுக் கொடுக்கும் நிலை இருந்ததாலும், இவரது இந்த ஆராய்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
எந்த உணவுப்பொருளில் எவ்வளவு சத்து உள்ளது என்பதைக் கண்டறிந்து கூறினார். வைட்டமின் கண்டுபிடிப்புக்காக 1929-ல் இவருக்கும் கிறிஸ்டியன் எய்க்மேன் என்பவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.