வெற்றிக் கொடி

வெற்றியின் தூண்கள்!

Guest Author

கல்வி, தொழில், வணிகம், அறிவியல், விளையாட்டு என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் போட்டி அதிகரித்து வரும் காலம் இது. இத்தகைய சூழலில் வெற்றி அடையக் கடின உழைப்பு மட்டும் போதாது.

பறவை உயரப் பறக்கச் சிறகுகள் தேவைப்படுவதுபோல, வாழ்க்கையில் உயரங்களைத் தொடத் தன்னம்பிக் கையும் சாதுர்யமான உழைப்பும் அவசியம். இவை இரண்டும் ஒருவரின் வாழ்க்கையைச் சாதாரண நிலையில் இருந்து சாதனை நிலைக்கு உயர்த்துகின்றன.

நமது திறமை, அறிவு, முயற்சியின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை. மனிதருக்குத் தன்னம்பிக்கை மிக முக்கியம். வாழ்க்கையில் பல தடைகள், தோல்விகள், சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதற் கான மனவலிமையைத் தன்னம்பிக்கை அளிக்கிறது.

தன்னம்பிக்கை இல்லாதவர் சிறிய பிரச்சினை களுக்கே மனம் தளர்ந்துவிடுவார். தன்னம்பிக்கை கொண்டவர் அதே பிரச்சினையை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெறுவார் என்பது வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தைத் தொடங்கிய தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி.

நொந்த நேரத்தில் சொந்த விமானம்

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுக்குச் செல்ல ரிச்சர்ட் பிரான்சனும் சக பயணிகளும் விமான நிலையத்தில் ஒருமுறை காத்திருந்தபோது சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அன்றைக்கான சேவையை ரத்துசெய்தது. சற்றும் மனம் தளராத ரிச்சர்ட் பிரான்சன் அதே விமான நிலையத்தில் இருந்த மற்றொரு விமான நிறுவனத்தை உடனடியாகத் தொடர்புகொண்டார்.

வேறொரு விமானத்தை வாடகைக்கு எடுத்து தன்னுடன் இருந்த சக பயணிகளிடம் கட்டணம் வசூலித்து பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுக்கு அழைத்துச்சென்றார். இதுவே வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் உருவாகக் காரணமாக அமைத்தது. இது ரிச்சர்ட் பிரான்சன் தன் மீது வைத்திருந்த தன்னம்பிக்கையையும் சாதுர்யமான உழைப்புக்கும் முன்னுதாரணம்.

கடந்த காலத்தில், 'உழைத்தால் உயரலாம்' என்கிற கருத்து மட்டுமே வலியுறுத்தப்பட்டது. இன்றைக்கு “சரியான முறையில் உழைத்தால் விரைவாக உயரலாம்” என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அதிக நேரம் செலவிட்டு முயற்சி செய்வது கடின உழைப்பு. அதே பணியைக் குறைந்த நேரத்தில், அதிகத் திறனுடன் செய்து முடித்தல் சாதுர்யமான உழைப்பு.

தலைவர்களின் புத்தியும் உத்தியும்

யுத்தமின்றி ரத்தமின்றி நாட்டை விடுதலை நோக்கி வழிநடத்தியவர் காந்தியடிகள். தன்னம்பிக்கையும் தெளிவான இலக்கும் அவரின் மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்கள். அவர் மேற்கொண்ட போராட்டங்கள் திட்டமிடப்பட்ட சாதுர்யமான உழைப்பின் காரணமாக வெற்றி அடைந்தன.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளியே வந்தவர் பழிவாங்கும் எண்ணத்தை விடுத்து, சமாதானத்தை முன்னிறுத்தி சாதுர்யமாக செயல்பட்டார். பின்னர் தென்னாப்பிரிக்காவின் அதிபராக உயர்ந்தார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.

தன்னம்பிக்கை எதற்கு?

தன்னம்பிக்கை உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளை ஏற்கத் தயங்க மாட்டார்கள், தோல்வியைப் பாடமாக எடுத்துக்கொள்வார்கள், சவால்களை எதிர்கொள்வார்கள், தலைமைப் பொறுப்புகளை ஏற்க முன்வருவார்கள், பிறருக்கு ஊக்கமளிப்பார்கள். தன்னம்பிக்கை என்பது பிறப்பிலேயே கிடைப்ப தல்ல. அதை வளர்த்துக்கொள்ள முடியும். சிறிய வெற்றிகளை அடைவதன் மூலம் பெரிய நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளலாம்.

தன்னம்பிக்கை என்பது வெற்றியின் விதை. சாதுர்யமான உழைப்பு என்பது அந்த விதைக்கு நீர் ஊற்றி வளர்க்கும் செயலாகும். இந்த இரண்டும் இணைந்தால் சாதாரண மனிதரும் அசாதாரண சாதனைகளைப் படைக்க முடியும்.

உலகின் அனைத்து வெற்றியாளர்களின் வாழ்க்கையிலும் இந்த இரண்டு பண்புகளும் பொதுவாகக் காணப்படுகின்றன. இன்றைய தலைமுறை “என்னால் முடியுமா?” என்று கேட்பதைவிட, “இதை எப்படிச் செய்து முடிக்கலாம்?” என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

சாதுர்யமான உழைப்பின் அம்சங்கள்

* இலக்கு இல்லாத முயற்சி திசையற்ற பயணத்தைப் போன்றது. எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* வெற்றி பெற்றவர்கள் நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

* முக்கியமான பணிகளை முதலில் செய்து முடித்தல்.

* இணையம், செயற்கை நுண்ணறிவு, கணினி மென்பொருள்கள், போன்றவற்றைப் பயன்படுத்தி வேலைகளை விரைவாக முடித்தல்.

* புதிய திறன்களைத் தொடர்ந்து கற்பது போட்டி நிறைந்த உலகில் முன்னேற உதவும்.

- அருண்குமார்; trnarunkumar@gmail.com

SCROLL FOR NEXT