வெற்றிக் கொடி

தேர்வுகளை ஊதித் தள்ளலாம்!

ஆதி

தேர்வு பயம், மதிப்பெண் பயம், உயர் கல்வி பயம் - நவீனக் காலத்தில் நம் குழந்தைகளை பெரிதும் அச்சுறுத்தும் விஷயங்கள் இவை. குறிப்பிட்ட சில உயர் படிப்புகளை மட்டுமே படித்தாக வேண்டும் எனப் பெற்றோர், சமூகம் தரும் அழுத்தங்களால் மாணவர்களின் எண்ணங்கள் சில சட்டகங்களுக்குள் அடைக்கப்படுகின்றன.

இதனால் ஏற்படும் நெருக்கடியில், ஒன்று அவர்களுடைய இயல்பான ஆர்வம்-விருப்பத்தைத் துறந்துவிடுகிறார்கள் அல்லது இயந்திரத்தனமாக எதையோ படித்து சுயமாக சிந்திக்க இயலாத 'ரோபாட் மனிதர்கள்' ஆகிறார்கள். ஒரு சிலர் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை, போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கிறார்கள்.

          

மாணவர்களிடையே நிலவும் இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என தர்க்கரீதியிலான வழிமுறைகளையும் சேர்த்து ஒரு கதையாகத் தந்திருக்கிறார் இந்திய அயலகப் பணி அதிகாரியும் எழுத்தாளருமான பயணி தரன்.

தளிர் நடுத்தர அளவில் ஒரு பிளஸ் 2 மாணவி. அதேநேரம், ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் தனித்திறமைகளைப் போல தளிருக்கும் இசை போன்ற திறமைகள் உண்டு. குழந்தைக்கு ஏற்ப கற்கும் முறைகள் மாற்றப்பட்டால், எல்லாக் குழந்தைகளும் சிறப்பான மதிப்பெண்ணையும், தன்னைத் தானே கண்டறியும் வித்தையையும் அறிந்துகொள்வார்கள். தளிருக்கு அவளுடைய கதிர் சித்தப்பா உதவுகிறார்.

கவனம் சிதறாமல் படிப்பது எப்படி; கற்றலுக்கு உதவும் பாடக்குறிப்புகளை எடுப்பது எப்படி; தகவலாகப் படிப்பதைவிட கேள்வி கேட்டு மூளையைச் சிந்திக்க வைத்து விடை காண்பது ஏன் அவசியம்; மூளை எப்படி ஒரு விஷயத்தை திறம்பட நினைவில் வைத்துக்கொள்கிறது - இப்படிப் பல்வேறு அடிப்படைக் கேள்விகளுக்கு தெளிவான, திட்டவட்டமான விடைகளை இந்த நூல் தருகிறது.

தற்காலிக நினைவுகளை ஆழமான நினைவுகளாக மாற்றுவதற்கான அறிவியல்பூர்வ கற்கும் வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது. இந்தக் காலத்துக்கு ஏற்ப விரிவாகப் படித்தவற்றை சில முக்கியப் புள்ளிகளாக ஆசிரியர் மாற்றித் தந்துள்ள உத்தி உண்மையிலேயே பயனுள்ளது.

கற்கும் முறைகளை அறிவியல்பூர்வமாக மாற்றிக்கொள்ளும்போது உடனடிப் பலன்களை எதிர்பார்க்கக் கூடாது, நீண்ட காலத்தில்தான் பலன்கள் தெரியத் தொடங்கும். அதுவரை காத்திருக்க வேண்டும்.

ஒரு மாணவரே சுயமாகத் தன் அறிவை வெளிப்படுத்த அந்த முறைகள் தயார்படுத்தும்.

இதன் மூலம் நாம் நாள்தோறும் பெறும் சின்னச் சின்ன வெற்றிகள், அதனால் உற்சாகம் பெற்றுத் தொடர்ந்து உழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

கற்கும் திறமைக்கு எல்லையே இல்லை. உலகின் எந்தக் கடினமான தேர்வாக இருந்தாலும் சரி, அதை எதிர்கொள்ளவும் வெற்றிபெறவும் முடியும் என ஆணித்தரமாகக் கூறுகிறார் பயணி தரன். இறுதித் தேர்வில் ஒருவர் பெறும் மதிப்பெண்ணையும் ஒருவருடைய அடிப்படைக் கற்கும் திறமைக்கான மதிப்பெண்ணாகக் கருத வேண்டியதில்லை.

எல்லாருக்கும் தேர்வு வெளிப்பாட்டுக்கான மதிப்பு வேறு, அவருடைய உள்ளார்ந்த திறமையின் மதிப்பு வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளார்ந்த திறமையைக் கண்டறிவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்.

நமது இளையோரிடம் எப்படி ஒரு விஷயத்தை முன்வைக்க வேண்டும், அணுக வேண்டும் என்பதற்கு ஆரோக்கியமான எடுத்துக்காட்டாக இந்நூலைச் சொல்லலாம். இதுபோல் அறிவியல் உத்திகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ் நூல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.

விதையெல்லாம் மரமாகும் அல்லது கற்பது எப்படி?: அறிவியல் சொல்லும் உண்மைகள், பயணி தரன், எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம், தொடர்புக்கு: 044-24332924

SCROLL FOR NEXT