அமெரிக்க ஆசிரியர் ஒருவர் கண்ணீர் மல்கக் காணொளி ஒன்றைச் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
சிறந்த ஆசிரியர் என விருது பெற்ற மூத்த ஆசிரியர் அவர். அந்தக் காணொளியில், "இளம்பருவ மாணவர்களுக்கு ஒரு வரிகூட எழுதத் தெரியவில்லை.
எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வமே இல்லை. இந்தத் தலைமுறை கல்வியில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறது. அதனால் ஆசிரியர் வேலையை விட்டு விலகுகிறேன்" என்றார்.
'வகுப்பறையில் வன்முறை அதிகரித்து விட்டது. ஆசிரியரிடமும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்..' என்பது போன்ற காரணங்களால் அமெரிக்கா உள்பட சில நாடுகளில் ஆசிரியர் வேலையை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துவருகிறது. இந்தியாவிலும் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் அவ்வப்போது வேலையைத் துறக்கும் சம்பவம் பேசுபொருளாகிறது.
கரோனா காரணமா?
ஆசிரியர்களுடனான கலந்துரையாட லின்போது, “இன்றைய மாணவர்களிடம் ஏதேனும் மாற்றங்களை உணர்றீங்களா?” எனக் கேட்டார் ஒருவர்.
“ஆம். கடந்த இரண்டு ஆண்டுகளா அதிகமா மாற்றம் தெரியுது” என்றேன். மற்றொருவர், “கரோனாவுக்குப் பிறகே தரம் ரெம்பக் கெட்டுப்போயிருச்சு” என்றார். எல்லாத் தரப்பிலும் கரோனாவைக் குற்றம் சொல்வது வழக்கமாகிவிட்டது.
பெருமுடக்கக் காலத்தில் குழந்தைகள் குழப்பம், பயம், அதிர்ச்சி எனப் பலவற்றில் ஆழ்ந்திருந்தனர். அவர்களுக்கு நாம் கொடுத்த ஒரே துணை திறன்பேசி. அதன் வழியாகவே உலகைப் பார்க்கக் குழந்தைகள் பழகிவிட்டனர்.
அதன் விளைவுகளை இப்போதுதான் நாம் உணரத் தொடங்கியுள்ளோம். அப்போது புதிதாக வந்த புத்தகங்களும் பாடச்சுமையை அதிகரிப்பதாக இருந்தன. கற்றல் இடைவெளியை இட்டு நிரப்புகிறோம் எனச் சொல்லிக் குழந்தைகள் மீது தகவல்களைத் திணித்தது நாம்தான் என்றும் தோன்றியது.
பூத்துக்குலுங்கும் மலர்கள்
குழந்தைகள் நொடிக்கு நொடி புதிதாகப் பூப்பவர்கள். எவ்வளவு ஆர்வமாக விளையாடினாலும் சடக்கென்று ஒரு நொடியில் வேறு ஒன்றுக்கு மாறுவார்கள். பிடித்ததிலேயே மாறுபவர்களுக்குப் பிடிக்காத ஒன்றிலிருந்து விலகுவது எளிதாக இருந்தது. புத்தகங்களின் இடத்தை வெகு சுலபமாகத் திறன்பேசிப் பிடித்துக் கொண்டது.
குழந்தைகளுள் சண்டை வருவதும் சமாதானம் ஆவதும் சாதாரணம். யாரேனும் சண்டை போட்டுக்கொண்டால், “ஒருவரை அடிப்பது மனிதத் தன்மை இல்லை. மன்னிப்பதே மனிதப் பண்பு” என்பேன்.
உடனே சண்டையிட்ட இருவரும் மாற்றி மாற்றி மன்னிப்புக் கேட்பார்கள். சண்டையை மறந்தும்விடுவர்கள். பெருஞ் சண்டைகளில் மன்னிக்கச் சிறிது காலம் எடுக்கலாம்.
வாசமிழக்கும் அரும்புகள்
இன்றைய குழந்தைகளிடம் ‘நான்' என்பது வலுவாகி இருப்பதாக உணர்கி றேன். இப்போதெல்லாம் சண்டையிடும் சிறாரிடம் நான் வழக்கமாகச் சொல்வ தையே சொன்னால், எதிர்வினை வேறு விதமாக இருக்கிறது. “சரிங்க சார், மன்னிச்சிட்டேன்” எனச் சொன்னபடியே அடுத்தவனை அடிக்கிறார் அந்த மாணவர்.
அடி வாங்கிய மாணவரும் திருப்பி அடித்தபடியே அதே வசனத்தைச் சொல்கிறார். மாற்றி மாற்றி அடிப்பது பெரிய சண்டையாகி ஒருவரை மற்றொருவர் துரத்திக்கொண்டு ஓடுவார்கள். அவர்கள் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதைப் பார்க்க நமக்கோ உள்ளம் பதைபதைக்கும். ஒன்றாகவே இருப்பதும் அடிக்கடி சண்டை போடுவதும் கலந்த வித்தியாச நட்பு இன்றைய குழந்தைகளிடம் தோன்றியுள்ளது.
பகிர்ந்துகொள்ள ஓர் இடம்
பள்ளிக்குள் சக ஆசிரியர்கள், உதவித்தலைமையாசிரியர்கள், தலைமையாசிரி யர் ஆகியோரால் ஏற்படும் அழுத்தங்களைக் கவலையோடும் நகைச்சுவையோடும் ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால் பகிர்ந்துகொள்வது வழக்கம்.
குழந்தைகள் மீது அக்கறையோடு வகுப்பறையில் புதிய உத்திகளைச் செயல்படுத்தும் ஆசிரியருக்கு முதல் எதிர்ப்பு சக ஆசிரியரிடம் இருந்துதான் எழும். அவர்கள் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டுவதற்கு ஒர் இடம் வேண்டும் என எங்கள் பேராசிரியர் ச. மாடசாமி அடிக்கடி சொல்வார்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பயிற்சியின்போது அப்படி ஓர் அமர்வை உருவாக்கினோம். ஆசிரி யர்களின் மனப் பகிர்வு பல மணி நேரத்துக்கு நீண்டது. அதுபோன்று ஆசிரி யர்கள் கலந்துரையாடும் களங்கள் அரிதாகி விட்டன.
கானல் நீர்ப் பாதை
இப்போது ஆசிரியர்கள் சந்திப்பில் சக ஆசிரியர்களால் உருவாகும் அழுத்தத்துடன் குழந்தைகளின் அதீத செயல்கள், வன்முறை, தீயப்பழக்கங்கள், படிப்பில் அக்கறையின்மை தொடர்பான பேச்சு அதிகரித்துள்ளது. இது போக கல்வி அமைப்பு தரும் அழுத்தங்களால் புலம்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஜென் ஸீ தலைமுறையினரின் செயல்பாடுகளைப் பற்றி மூத்தவர்கள் கடுமையாகக் குற்றம் சொல்கிறார்கள். ஜென்ஸீக்கு அடுத்தபடியான ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் நடுநிலை வகுப்புக்கு வந்துவிட்டனர்.
அவர்களின் செயல்பாடுகள் முந்தைய தலைமுறையைவிட வேறு பட்டதாக இருக்கிறது. எதிலும் ஒரு விட்டேத்தியான, ஆர்வமற்ற மனநிலை. ஒன்றில் ஆர்வம் காட்டுகிறார்கள் என நினைக்கும்போதே, அதிலிருந்து கவனத்தை விலக்கிவிடுகிறார்கள். வகுப்பறைக்குள் இருக்கிறோம் என்பது பற்றிய உணர்வே இல்லாமல், அருகில் இருப்பவர்களுடன் பேசுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
நடுநிலை வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் இருந்து இந்தப் புலம்பல் வெளிப்படத் தொடங்குகிறது. வகுப்பு கூடக்கூடப் புலம்பலும் கூடுகிறது. இதே நிலையில்தான் பெற்றோர்களும் உள்ளனர்.
(தொடர்ந்து பேசுவோம்)
- தொடர்புக்கு: artsiva13@gmail.com