வெற்றிக் கொடி

நேரே நில், வரிசையாகச் செல்! | ஓர் ஆசிரியக் கனவு 7

‘கலகல வகுப்பறை’ சிவா

சில ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் ஏதேனும் தவறு செய்தால், ‘படிச்சவன் தானே நீ?, படிச்சவனே இப்படிச் செய்யலாமா?’ என்றெல்லாம் கிராமங்களில் கேட்பார்கள்.

தலைமுடி குறித்த கட்டுரை வெளிவந்த பிறகு பல்வேறு தளங்களில் ஏராளமான விவாதங்கள். ஒழுக்கம் முடியில்தான் தொடங்குகிறது. முடியைக் கண்டபடி வைத் திருப்பவர் ஒழுக்கமாக இருக்கவே முடியாது என வாதிட்டவர்கள் ஏராளம்.

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற நகைத்திருட்டில் சிக்கியிருப்பவர் திருத்தமாக முடியை வெட்டி இருக்கிறார். அவர் படித்தவர். அவருக்குத் துணை செய்தவரும் படித்தவர்.

குடும்பமும் உதவியாக இருந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் சென்னையில் சில இளை ஞர்கள் கண்டபடி சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிப் பதற்றத்தை ஏற்படுத் தினர்.

காவல் துறையினர் வந்து அவர்களைப் பிடித்துச் சென்றனர். ‘தெரியாமல் செய்து விட்டோம்’ என்று பிடிபட்டவர்கள் அழுதனர். ‘பெரிய பெரிய தப்பு செய்தவர்களை விட்டுடறீங்க.

இதெல்லாம் பெரிய தப்பா?’ என்று பெற்றோர் கேட்கும் காணொளிகள் வெளிவந்தன. சமூகம் பெரும்பாலும் ஆடம்பரத்தை நேசிப்பதாக மாறிவிட்டது. அதற்காக எதுவும் செய்யலாம் என்கிற மனநிலைக்குப் பெரியவர்களும் மாறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

பட்டிமன்றச் சமூகம்

பண்டிகை நாள்களில் தொலைக்காட்சி அலைவரிசைகள் பலவற்றில் தவறாது இடம் பெறுவது பட்டிமன்றம். இரண்டு பிரிவுகளில் பேசுபவர்களும் தங்கள் தரப்புதான் சரி என வாதிடுவார்கள். நமது சமூகமும் பட்டிமன்றச் சமுதாயமாக மாறிவிட்டது.

எதிர்த்தரப்பின் வாதங்களுக்குக் காது கொடுத்துக் கலந்துரை யாடலை நிகழ்த்துவது இல்லை. கேள்வியும் பதிலுமாக, கேலியும் கிண்டலுமாகப் பட்டிமன்றம் நிகழ்கிறது. எதிர்த்தரப்பு என்பது எதிரித் தரப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று கத்துகிறார்கள்.

இதேபோன்றுதான், ஒழுக்கத்தை மீறும் செய்திகள் வெளியாகும் போதெல்லாம் பள்ளியில் ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டும் என்கிற குரல்களும் எழுகின்றன. சமூகம், வீடு என்கிற இரண்டு தரப்பும் தங்களது பொறுப்புகள் அனைத்தையும் பள்ளி, ஆசிரி யர் மீது சாமர்த்தியமாகச் சுமத்துகின்றன.

எது சிறந்த பள்ளி?

‘பள்ளிகள் ஏன் தேவை?’ என்கிற கேள்வி யைப் பலரிடமும் கேட்டேன். அனைவரிடமும் பழகும் வாய்ப்புக் கிடைக்க, நட்பு வளர்க்க, விட்டுக்கொடுப் பதற்குப் பழக, பகிர்ந்துகொள்ள, கற்க, குதூகலமாக இருக்க, குழு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள, தான் யார் என்பதை உணர, சுய ஒழுக்கத்தை அறிய, மனதளவில் எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்ள, வாசிக்க, பகுத்தறிவைப் பயில, சமூகத் திறனைக் கற்க, வாழ்க்கை சார்ந்த அடிப்படை திறன்களைப் பெற, படிக்க, திறமையை வளர்க்க என்பவை உள்ளிட்ட நீண்ட பட்டியல் கிடைத்தது.

இவை அனைத்தையும் மனதில் வைத்தா பள்ளியைத் தேடுகிறோம்? அல்லது நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இவ்வளவும் நிகழ்கிறதா என்று பிள்ளைகளிடம் கேட்டிருக்கிறோமா? ‘எங்களுடையது மட்டுமே மிகவும் சிறந்த பள்ளி’ என்று தனியார்ப் பள்ளிகள் பல விளம்பரம் செய்கின்றன.

ஆங்கிலம், நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி, குளிர்சாதன வசதி என ஏராளமான தூண்டில்கள். சிலர் பொருளாதாரப் பெருமைக்கு ஏற்பப் பள்ளியைத் தேடுகிறார்கள். விளம்பரத்தில் மயங்கி கடன்பட்டாவது வசதியான பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பவர் பலர். பாடுபட்டுப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்த பிறகு அதுவும் பெருமிதமாக மாறுகிறது.

ஹாய் சொல்லுங்க! நல்லா சிரிங்க!

நடைபெற்று முடிந்த மதுரை புத்தகக் காட்சி தொடங்கியதில் இருந்து முடியும் வரை நாள்தோறும் சிறார் அரங்கில் இருந்தேன். ஏராளமான பள்ளிக் குழந்தைகள் வருகை தந்தனர்.

அரசுப் பள்ளி மாணவர் களை அழைத்துவரப் பேருந்து வசதி செய்யப் பட்டிருந்தது. குழந்தைகளைச் சுதந்திரமாக விட்டு, தாய்க்கோழி போலப் பார்த்தபடி சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஏராளம்.

பளிச்சென்ற சீருடையுடன் தனியார்ப் பள்ளி ஒன்றின் மாணவர்கள் வரிசையாக வந்தனர். சீருடை அணிந்த ஆசிரியர்கள், ஆங்கிலத்தில் விதிமுறைகளைக் கூறினார்கள். அரங்குகளின் ஓர் ஓரமாக வரிசை நகரத் தொடங்கியது. “இது புத்தகத் திருவிழா. கடைக்கு உள்ளே போய்ப் பாருங்க” என மாணவர்களிடம் சொன்னேன்.

ஆனாலும் வரிசை நகர்ந்தது. சில அரங்குகளில், “உள்ளே வந்து பாருங்க” என்று அழைத்தார்கள். மருண்ட விழிகள் விரிய, அந்த மாணவர்கள் வரிசையாக நகர்ந்துகொண்டே இருந்தார்கள். புத்தகங்கள் அவர்களை ஏக்கமாகப் பார்க்க அவர்களும் ஏக்கமாகப் பார்த்த படியே நடந்தனர்.

சுற்றிவந்த பிறகு சிறார் அரங்கில் கதை சொல்லுபவர் குதித்து, உருண்டு கதை சொன்னபோது குழந்தைகள் சிரித்து மகிழ்வதையும் “ஹாய் சொல்லுங்க!” என்று சொல்லி காணொளியாகப் பதிவதை யும் சரியாகச் செய்தார்கள்.

பள்ளியிலும் வெளியிலும் வரிசையாகச் செல்வது, கழிப்பறைக்குப் பின்னால் கைகளைக் கட்டி வரிசையாகச் செல்வது போன்று உருவாக்கப்பட்டவையே ஒழுக்கம் என்று எல்லார் மனதிலும் பதிய வைக்கப்பட்டு இருக்கிறது. சூழலுக்கு, இடத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் சிறு சுதந்திரம்கூட ஆசிரியருக்கு இல்லை என்பதே நிதர்சனம்.

சின்ன கோடு, பெரிய கோடு

ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்க, அதன் அருகிலேயே பெரிய கோடு போடு வதைப் பலரும் நன்கு அறிந்தவர்கள். அதனா லேயே அரசுப் பள்ளிகள் மீது குற்றங்களைச் சுமத்துவது எளிதாகின்றன. பெரும்பாலும் அவை ஒழுக்கம் குறித்ததாகவே இருக்கின்றன.

ஒரு சில காணொளிகள் மூலம் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் குறை சொல்லிவிட முடிகிறது. அண்மையில் மூன்று வயதுக் குழந்தையின் கைகளைக் கட்டி, அடித்துச் சித்திரவதை செய்தது குறித்தக் காணொளி யால் மனம் பதைபதைத்தோம். அதுபோன்ற குற்றங்கள் நிகழும்போது எல்லாத் தனியார்ப் பள்ளிகளையும் பேச்சுக்குக் கூட எதுவும் சொல்வது இல்லையே.

தொடர்ந்து பேசுவோம்!

- தொடர்புக்கு: artsiva13@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT