வெற்றிக் கொடி

விருப்பமான கோடை விடுமுறைக் கொண்டாட்டம்

சோ.இராமு

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக் காலம் மிகப் பெரிய கொண் டாட்டமாக அமைகிறது. இந்த விடு முறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பவர்கள் நல்ல பல மாற்றங்களுடன், புதியவற்றைக் கற்றுக்கொள்வதுடன், புதுவித அனுபவத்தையும் பெறுகி றார்கள்.

இதில் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டியது குழந்தைகளின் விருப்பம். இதற்குத்தக்கபடி கோடை விடுமுறை யைப் பெற்றோர் வடிவமைப்பது உகந்தது. பெற்றோருக்குப் பிடிக்கிறது என்பதற்காக விருப்ப மில்லாத பயிற்சி வகுப்புகளுக்குச் சிறாரை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

          

விருப்பப்படி கோடைப் பயிற்சி வகுப்புகள் கட்டணத்துடனும், ஒரு சில அரசுத் துறைகளின்கீழ் கட்டணம் இன்றியும் நடத்தப்படு கின்றன. எந்தெந்தப் பயிற்சி வகுப்புகள் கட்டணம் இல்லா மல் எந்தெந்த இடங்களில் நடை பெறுகின்றன என்பதைப் பெற்றோர் விழிப்புடன் கவனித்து விருப்பமுள்ள குழந்தைகளைச் சேர்த்து விடலாம்.

பயிற்சி வகுப்புக்குப் பதில், உறவினர் வீடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டும் குழந்தைகளும் இருப்பார்கள். அவர்களை வகுப்புக்குச் செல்ல பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது.

பள்ளி வயதுக் குழந்தைகள் நீண்ட கோடை விடுமுறைக் காலத்தில் நாள் தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது எழுதுதல், வாசித்தலுடன் தொடர்பில் இருப்பது நல்லது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர நுழைவுத் தேர்வுக்கு தயாராகலாம்.

பெற்றோர் கவனிக்க...

விடுமுறைக் காலத்தில் குழந்தைகள் யாருடன் எங்கெங்கெல்லாம் செல்கின்றனர் என்பதைப் பெற்றோர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நட்பு வட்டத்தில் தீய பழக்கங்களைக் கற்கும் அபாயம் இருப்பதால், இதில் கூடுதல் அக்கறை அவசியமாகிறது.

வீட்டில் உள்ள இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சுற்றுகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் இன்றி குழந்தைகள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். கோடைக் காலத்துக்கு ஏற்ற பானங்கள், உணவு வகைகள், உடைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியதும் முக்கியம்.

தன்னம்பிக்கை பிறக்க

வாய்ப்பும் வசதியும் உள்ளபோது பெற்றோர், உறவினருடன் சுற்றுலா செல்வது குழந்தைகளுக்கு நல்ல அனுபவமாக அமையும். உள்ளூர், உற்றார் உறவினர் விழாக்கள், திருவிழாக்களில் கலந்துகொள்ளலாம். நூலகத்துக்குச் சென்று வாசிப்பின் புதிய கதவைத் திறந்துவைக்கலாம்.

அருகில் உள்ள தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல், தொல்லியல் சார்ந்த இடங்களுக்குச் செல்லுதல், கண்காட்சி, பொருள்காட்சிக்குச் செல்லுதல் ஆகியவை அறிவை விரிவு செய்ய உதவும்.

தற்காப்புக் கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, புதிய மொழிகளைக் கற்றல், வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், தட்டெழுத்துப் பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணி நேரம் செலவிட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுவது நிச்சயம். புதியன கற்கும்போது தன்னம்பிக்கை பிறக்கும்.

பெற்றோருடன் உள்ளாட்சி அலுவலகம், ரயில் நிலையம் போன்றவற்றுக்குச் சென்று வாருங்கள். நாற்றுப் பண்ணை யில் ஒரு சில தாவரங்களை வாங்கி வந்து, வீட்டுத் தோட்டத்தில் நட்டுத் தண்ணீர் ஊற்றிப் பராமரியுங்கள்.

புதிய கல்வியாண்டில் புதிய வகுப்பில் நீங்கள் அடி எடுத்து வைக்கும்போது கடந்த ஆண்டிலிருந்த திறமைகளைவிடக் கூடுதலான திறமைகள் உங்களிடம் வளர்ந்திருக்க வேண்டும். கோடை விடுமுறையில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறட்டும்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சேடப்பட்டி ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல்; choraamu@gmail.com

SCROLL FOR NEXT