இன்றைய இளைஞர்களிடம் "வெற்றி என்றால் என்ன?" எனக் கேட்டால், அதிக ஊதியம், வெளி நாட்டு வேலை, சொந்த வீடு, ஆடம்பர கார், சமூக ஊடக வெளிச்சம் எனப் பலர் சொல்லக்கூடும். இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதியே; வாழ்க்கையின் முழுமை அல்ல.
எது வெற்றி, எது உயர்வு, வாழ்க்கையின் உண்மையான நோக்கம் எது என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அதிவேகமாக வளர்ந்திருக்கும் இன்றைய தொழில் நுட்பத்தில் அல்ல, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் வாழ்க்கையில் தேட வேண்டும்.
நாம் எவ்வளவு உயரம் சென்றோம் என்பதல்ல; நம்மால் எத்தனை பேர் உயர்ந்தார்கள் என்பதே வெற்றி என உணர்த் தும் விதமாக, ‘அறம் செய விரும்பு' எனப் பாடினார் ஔவையார். அறத்தை விரும்பும் மனம் இருந்தால், வெற்றி நம்மைத் தேடி வரும். மூன்றே சொற்களில் ஒரு முழு வாழ்க்கைத் தத்துவம்.
வாழ்ந்து காட்டிய தலைமை
திருவள்ளுவர், ‘ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்றார். காந்தியடிகளின் வாழ்க்கை இந்தக் குறளின் உயிர்ப்பே. அவர் உலகுக்கு கற்றுக்கொடுத்தது, வன்முறை யால் மனிதரை வெல்லலாம்; ஆனால், மனதை வெல்ல முடியாது.
அவரது வாழ்க்கையை ஆழமாகப் படித்தவர்களில் ஒருவர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இருவருக்கும் இடையே பரிமாறப்பட்ட கடிதங் கள், உலகச் சிந்தனை வரலாற்றில் முக்கிய இடம்பெறுகின்றன. உண்மை, அன்பு, அகிம்சை, மனித சமத்துவம் ஆகிய கருத்துகளில் அவர்கள் ஒரே அலைவரிசையில் இருந்தனர்.
எழுத்தும் பண்பும்!
லியோ டால்ஸ்டாய் எழுத்தால் மனித மனங்களை உழுதவர். ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதற்கும், ஒரு மகத்தான மனிதர் என்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உண்டு. லியோ டால்ஸ்டாய் இரண்டுமாக இருந்தார். அவரிடம் செல்வம் இருந்தது. புகழ் இருந்தது.
குடும்ப மரியாதை இருந்தது, ஆனால், அவை எதுவும் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியைத் தரவில்லை. அதன்பிறகுதான் அவர் தன்னைத் தேடத் தொடங்கினார். விவசாயிகளுடன் வாழ்ந்தார். எளிமையை ஏற்றுக் கொண்டார். மனித சமத்துவத்தைப் போதித்தார்.
அவர் எழுதிய ‘War and Peace’ வெறும் நாவல் அல்ல, மனித மனத்தின் வரலாறு. ‘அன்னா கரேனினா’ ஒரு காதல் கதை மட்டுமல்ல; மனித உணர்வுகளின் உளவியல்.
“உலகத்தின் மிகப் பெரிய மாற்றம் எது?” என டால்ஸ்டாயிடம் கேட்கப்பட்டபோது, “ஒவ்வொரு மனிதனும் உலகத்தை மாற்ற நினைக்கிறான்; ஆனால், தன்னை மாற்ற நினைப்பதில்லை” என்றார். இந்த ஒரு சிந்தனையே காலத்தை வென்றுவிட்டது.
தகவல் புரட்சியாளர்
இன்று உலகில் ஏதோ ஒரு மூலையில் நிகழும் ஒரு சம்பவம் சில நிமிடங்களிலேயே உலக மக்களுக்குத் தெரியவருகிறது. இந்த 24 மணி நேரச் செய்தி ஒளிபரப்பு எனும் புரட்சிகரமான சிந்தனையை முன்வைத்தவர் அமெரிக்காவின் சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கிய டெட் டர்னர்.
ஆனால், அவரது வாழ்க்கை வெற்றியால் தொடங்கவில்லை. இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்ப நிறுவனத்தின் பொறுப்பை ஏற்கவேண்டிய சூழ்நிலை உருவானது.
பொருளாதார நெருக்கடி, தொழில் சவால்கள், கடுமையான போட்டி—ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அப்போது பல முதலீட்டாளர்கள் அவரிடம் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது: “24 மணி நேர செய்தி சேனலா? யாரும் அதைப் பார்க்க மாட்டார்கள்.” ஆனால் உலகை மாற்றுபவர்கள், உலகம் அதுவரை நம்புவதை மட்டுமே நம்புபவர்கள் அல்ல.
“ஒரு பெரிய கனவு காணுங்கள். அது உங்களைப் பயமுறுத்தவில்லை என்றால், அது போதுமான அளவு பெரிய கனவு அல்ல" என நம்பினார் டர்னர். அவரது கனவு சிஎன்என் ஆக உருவெடுத்தது. அது ஒரு செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமல்ல; தகவல் பரிமாற்றத்தின் வரலாற்றையே மாற்றிய புரட்சி.
அன்பின் அருமை
ஒரு மருத்துவர் சிறந்த அறுவைசிகிச்சை நிபுண ராக இருக்கலாம். ஒரு அறிவியலாளர் உலகை வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். ஒரு தொழிலதிபர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகளை உருவாக்கலாம். ஆனால், மனிதநேயம் இல்லையென்றால், அவற்றின் மதிப்பு முழுமையடையாது.
அதனால்தான் திருவள்ளுவர், அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (72) என்றார். அன்பு கொண்ட மனிதர் தனக்காக மட்டுமல்ல; பிறருக்காகவும் வாழ்கிறார். இந்த எண்ணமே காந்தியிடமும், தலாய் லாமாவிடமும், டால்ஸ்டா யிடமும், உலகின் பல மகத்தான தலைவர்களிடமும் பொதுவாகக் காணப்படும் பண்பு.
உலகத்தை மாற்றும் ஆற்றல், ஒவ்வொரு மனிதனின் மனத்திலேயே உறங்கிக் கொண்டி ருக்கிறது. அந்த ஆற்றலை எழுப்புவதே கல்வி; அதை நல்வழியில் பயன்படுத்துவதே வாழ்க்கை; அதனால் பிறரை உயர்த்துவதே உண்மையான வெற்றி. அந்த வெற்றியை நாம் அடைய வேண்டும்.
- கட்டுரையாளர்: அருண் குமார் நரசிம்மன், எழுத்தாளர்; trnarunkumar@gmail.com