பிரிட்டன் பேரரசின் ஆயுத பலத்துக்கு எதிராக சத்தியாகிரகம், அகிம்சை எனும் வீரியமிக்க ஆயுதங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் காந்தியடிகள்.
பல லட்சம் மக்களைத் தன் ஒற்றைக் குரலால் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் ஒருங்கிணைத்த இந்த மாமனிதர், தன் இளவயதில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட சராசரி மாணவர்.
அவரது பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட சில அனுபவங்களும், அவர் உள்வாங்கிய கதைகளுமே சாதாரண மோகன்தாஸை உலகமே போற்றும் ‘மகாத்மா’வாக மாற்றின. சிறுவன் மோகன்தாஸுக்கு விளையாட்டு களிலோ, பிற மாணவர்களுடன் அரட்டை அடிப்பதிலோ ஆர்வம் இருந்ததில்லை.
பள்ளி மணி அடித்தவுடன் வகுப்பறைக்குச் செல்வதும், வகுப்புகள் முடிந்தவுடன் யாருடனும் பேசாமல் வீட்டுக்கு ஓடி வருவதுமே வழக்கம். யாராவது தன்னிடம் பேசி கேலி செய்துவிடுவார்களோ என்கிற கூச்ச உணர்வும் பயமும் அவரிடம் எப்போதும் இருந்தன.
புத்தகங்களே அவரது தொடக்கக் காலத் தோழர்கள். இத்தகைய அமைதியான மாணவரின் வாழ்க்கையில், இளமைப் பருவத்துக்கே உரிய சில சலனங்களும் தவறுகளும் ஏற்படத்தான் செய்தன.
உண்மையின் பேராற்றல்
சகவயது நண்பனின் தூண்டுதலால், காந்திக்குச் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது. ஆரம்பத்தில் சுருட்டு வாங்குவதற்குப் பணம் இல்லாததால், வீட்டில் வேலை செய்பவர்களின் பையிலி ருந்து சில்லறைக் காசுகளைத் திருடத் தொடங்கினார்.
ஒருமுறை தன் அண்ணனின் தங்கக் காப்பிலிருந்து ஒரு சிறு பகுதியை வெட்டி யெடுத்து, அதை விற்றுப் பணமாக்கினார். இந்தத் திருட்டுச் சம்பவம் காந்தியின் மன சாட்சியை உலுக்கியது. பொய் சொல்வதும் திருடுவதும் தன் மனதை வதைப்பதை உணர்ந்தார். அப்போது அவரது தந்தை கரம்சந்த் காந்தி கடுமையாக நோயுற்றிருந்தார்.
தன் தந்தையிடம் சென்று தன் தவறை ஒப்புக்கொள்ள காந்திக்குத் துணிவில்லை. தான் செய்த தவறுகளை ஒரு கடிதத்தில் நேர்மையாக எழுதி, இனிமேல் இத்தகைய தவறுகளைச் செய்ய மாட்டேன் என உறுதியெடுத்துக்கொண்டு, அக்கடிதத்தைத் தந்தையின் கைகளில் கொடுத்தார்.
கடிதத்தைப் படித்த தந்தை, காந்தியை அடிக்கவோ திட்டவோ இல்லை. கண்ணீர் சிந்தினார். அந்த அரிய கண்ணீர்த்துளிகள் காந்தியின் கடிதத்தை நனைத்தன.
இது காந்தியின் மீதான கோபம் அல்ல; தன் மகன் உண்மையை ஒப்புக்கொண்டதற்காக அவர் சிந்திய நன்றிக் கண்ணீர். தந்தையின் அந்த அமைதி வழி தண்டனை, காந்தியின் மனதில் ‘அகிம்சை', ‘உண்மை'யின் பேராற்றலை முதன்முதலில் ஆழமாக விதைத்தது.
கடமை தவறா மகன்
காந்தியின் பள்ளிப் பருவத்தில் அவரது சிந்தனையை முழுமையாக மாற்றி, அவரது ஆளுமையைச் செதுக்கியதில் இரண்டு நாடக நூல்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. தந்தையின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களில் ‘சிரவண பித்ருபக்தி' நாடக நூலை காந்தி மிகுந்த ஆர்வத்துடன் படித்தார்.
பார்வையற்ற முதியோரான தாய்-தந்தையை, ‘துலாம் காவடி’ எனப்படும் பிரம்பால் வேயப்பட்ட கூடை வடிவிலான இருக்கையில் உட்கார வைத்து, தன் தோள்களில் சுமந்த மகன் சிரவணன். இவ்வாறு தனது பெற்றோரைப் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை அழைத்துச் சென்ற தூய பண்பாளன்.
அடர்ந்த காட்டைக் கடக்கும்போது தாகத்தால் தவித்த பெற்றோருக்காக, சரயு நதிக்கரையில் தண்ணீர் அள்ள ஒரு பானையுடன் சிரவணன் சென்றார். நதியில் பானையில் தண்ணீர் சேந்தும்போது ‘குபுக் குபுக்’ எனச் சத்தம் எழுந்தது. அப்போது வேட்டையாடிக் கொண்டிருந்த அயோத்தி மன்னன் தசரதனின் காதுகளில் அந்தச் சத்தம் கேட்டது.
விலங்குகள் தண்ணீர் குடிப்பதாகத் தவறாகக் கணித்த தசரதன், ஒலியைக் கேட்டு அம்பெய்யும் 'சப்தவேதி' கலையைப் பயன்படுத்தினார்.
அந்தக் கூரிய அம்பு பாய்ந்து ரத்த வெள் ளத்தில் உயிருக்குப் போராடினார் சிரவணன்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தசரதன், தான் ஒரு மனிதனைத் தாக்கியதை அறிந்து கதறி அழுதார். ஆனால், இறக்கும் தறுவாயிலும் சிரவணன் தசரதனிடம், “மன்னா, தாகத்தோடு இருக்கும் என் பெற்றோர் மரத்தடியில் காத்திருக்கிறார்கள், அவர்களிடம் இந்தத் தண்ணீரைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுங் கள்” என்று வேண்டிவிட்டு உயிர் துறந்தார்.
இந்த நாடகம் காந்தியின் மனதில் பெற் றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமை, சுயநலமற்ற அன்பின் தூய்மையை உணர்த்தியது. ‘நாமும் சிரவணனைப் போல பெற்றோரை மதிக்க வேண்டும், கடமை தவறக் கூடாது’ எனும் எண்ணத்தை அவருக்குள் ஆழமாக விதைத்தது.
வாய்மை
காந்தியின் பள்ளிப் பருவத்தில் அவர் பார்த்த ‘சத்திய அரிச்சந்திரன்’ நாடகம், அவரது வாழ்க்கையின் அசைக்க முடியாத அடித்தளமாக அமைந்தது. தன் நாடு, செல்வம், அந்தஸ்து, மனைவி, குழந்தை என அனைத்தையும் இழந்தாலும், சுடுகாட்டில் காவல் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அரிச்சந்திரன் எக்காலத்திலும் சின்ன பொய்கூடப் பேசாமல் உண்மையையே கடைப்பிடித்தார்.
இந்த நாடகத்தால், ‘உலகில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அரிச்சந்திரனைப் போல நாமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும்’ எனும் உறுதி காந்திக்கு உண்டானது.
உண்மை பேசுவது என்பது வெறும் புத்தகப் பாடம் அல்ல, அதுவே வாழ்வின் நெறி என்பதை உணர்ந்தார். இந்தத் தாக்கமே பின்னாளில் அவர் ‘சத்தியாகிரகம்’ (உண்மைக்கான பிடிவாதம் அல்லது போராட்டம்) எனும் உன்னத ஆயுதத்தைக் கண்டறிந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே நடுங்கவைக்கக் காரணமாக இருந்தது.
பிறக்கும்போதே காந்தி புனிதராகப் பிறக்கவில்லை. நம்மைப் போலப் பல தவறுகள் செய்த, சாதாரண மனிதராகத்தான் வாழ்க்கை யைத் தொடங்கினார்.
மற்றவர்களிடமிருந்து காந்தி மாறுபட்ட இடம் எதுவெனில், செய்த தவறுகளை மறைக்காமல் உண்மையை ஒப்புக்கொண்டு, தன்னைத் தானே அவர் சுயபரிசோதனை செய்துகொண்டார்.