வெற்றிக் கொடி

பேச்சும் மௌனமும் | இது நம் வகுப்பறை சமூகம் 07

ச.மாடசாமி

இசை, நடனம், ஓவியம் எனப் பல கலைகள் இருந்தாலும், அவை சிலரைத்தான் சென்றடைந்து இருக்கின்றன. பேச்சுதான் அனைவரையும் சென்றடைந்த கலை. மேடைப் பேச்சு காதுகளை மட்டும் சென்று சேரவில்லை. மனங்களையும் சேர்ந்திருக்கிறது. நாற்காலிகளையும் மாற்றி இருக்கிறது.

மரத்தடியில், ஊர்க்கூட்டங்களில் வெற்றிலையைக் குதப்பியபடி பேசிய பலர், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் படிக்காதவர்கள்; அல்லது அரைகுறைப் படிப்பாளிகள். பேச்சு மட்டுமா பிடிக்கிறது? மாணவர்களுக்கு ஆல்பர்ட் ஆசிரியரை ரொம்பப் பிடித்திருக்கிறது.

ஆல்பர்ட் ஆங்கில ஆசிரியர்; அமைதியானவர்; அதிகம் பேசாதவர். விடைத்தாளைத் திருத்திக் கொடுக்கும்போது இதுதான் சந்தர்ப்பம் என்று ஆசிரியர்கள் பலர் பேசுகின்றனர்.

“மார்க் பரவாயில்லை. மெயின்டெயின் பண்ணும்மா!” “மார்க் பத்தாதுப்பா! இன்னும் முயற்சி பண்ணு!” “இதெல்லாம் ஒரு மார்க்கா? பாடம் நடத்தும்போது ஒழுங்கா கவனி!”

பாடம் எதுவும் விளங்கலை: விடைத்தாள் கொடுக்கும்போது ஆல்பர்ட் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை; விடைத்தாளை வாங்கும் மாணவரை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. இது பலருக்கு சௌகரியம்.

நல்ல மதிப்பெண் வாங்கியவர்களுக்குச் சிறு ஏமாற்றம்; பாராட்டுக்கு ஏங்கும் காதுகளுக்கும் ஏமாற்றம். அவர்கள் காத்திருப்பார்கள்; காத்திருத்தல் வீண் போகாது. தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியவர்களைத் தனியே அழைத்துப் பாராட்டுவார் ஆல்பர்ட்.

ஒரு நேரம் பேச்சு; ஒரு நேரம் மௌனம்! - ஏகாம்பரம் கொஞ்சம் இடக்கான மாணவன். ‘இடக்கு ஏகாம்பரம்’ என்றுதான் மாணவர்கள் அவனை அழைப்பார்கள். ஆல்பர்ட் வகுப்பில் அவன் எழுந்தான். ஆங்கிலத்தில் இருந்த ‘ புத்தர்’ பாடத்தை ஆல்பர்ட் நடத்திக் கொண்டிருந்தார்.

“நீங்க நடத்துற பாடம் எதுவும் விளங்கலை” என்றான் ஏகாம்பரம். அவனை அமைதியாகப் பார்த்தார் ஆல்பர்ட். மெல்லப் புன்னகை செய்தார். இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? ஏகாம்பரம் குழம்பினான்.

பொறுமையாகக் கேள் என்று அர்த்தமா? உனக்கு மட்டும் விளங்கலையா என்று அர்த்தமா? புரியும்படியாகத்தானே நடத்துகிறேன் என்று அர்த்தமா? பேச்சுக்கு ஓர் அர்த்தம். மௌனத்துக்குப் பல அர்த்தங்கள். மௌனப் பேச்சு ஆல்பர்ட்டின் பலம்.

மௌனத்தைச் சமாளிப்பது எப்படி? - சிறு வயதில் சாந்தி அதிகம் பார்த்தது அம்மா அப்பா சண்டையைத்தான். சண்டை நடக்காத நாள் அபூர்வம். அப்பா அடிக்கடி குடித்துவிட்டு வருவார்.

சண்டைக்கான காரணம் அதுதான். நிற்காத வாக்குவாதம். “ஒரு பொம்பளைப் பிள்ளைய வச்சுக்கிட்டு குடிக்க எப்படி மனசு வருதோ?” “பேச்சை நிறுத்து! வீட்டை விட்டுப் போயிருவேன்”. “போ! போய்த் தொலை! நாங்க நிம்மதியா இருப்போம்”.

ஒருபோதும் திரும்பி வராதவர்போல அப்பா விடுவிடு என்று வீட்டைவிட்டுப் போவார். ஆனால், மாலையிலேயே வீடு திரும்புவார். மறுநாள் நல்ல பிள்ளையாகக் குடிக்கமாட்டார்.

எல்லாம் ஒரு நாள்தான். திரும்பக் குடிப்பார். திரும்ப வீட்டில் பேச்சு, இடையிடையே சண்டை, இப்போது அம்மா இல்லை. இறந்துவிட்டார். சாந்தியும் வளர்ந்துவிட்டார்.

திட்டமிட்டு எம்.எஸ்சி. வேதியியல் படித்துவிட்டார். வங்கித் தேர்வெழுதி, வங்கி ஒன்றில் பணியும் வாங்கிவிட்டார். அப்பா குடிப்பதை நிறுத்தவில்லை. அவ்வப்போது மனைவியை நினைத்துப் புலம்புவார், கலங்குவார்.

சாந்தி இயல்பிலேயே அதிகம் பேசுவதில்லை. அப்பா குடித்துவிட்டு வந்தால் சாந்தி பேசுவதே இல்லை. சாந்தி! சாந்தி! என்று அப்பா குழைவார்.

அப்பாவுக்குச் சாப்பாடு போடும்போதும் சாந்தி பேசுவது இல்லை. பேச்சைச் சமாளிக்கலாம். மௌனத்தைச் சமாளிப்பது எப்படி? மௌனம் சம்மதத்தின் அறிகுறியாக இருந்ததெல்லாம் பழைய காலம். அப்பா திகைத்தார். மகளின் மௌனம் அவரை உறங்கவிடவில்லை.

அம்மா பேசிய பேச்சின் தொடர்ச்சிதான், மகளின் மௌனம் என்பதை அப்பா புரிந்துகொள்ள நாளாகவில்லை. அப்பா புரிந்துகொண்டார். அவருடைய குடிப்பழக்கம் படிப்படியாகக் குறைந்தது. ஒரு நாள் குடிப்பதையே விட்டுவிட்டார்.

சாந்தி இப்போது சரளமாகப் பேசினார். சுவைபட பேசினார். இவ்வளவு நாள் எங்கிருந்தது இந்த இனிப்பு? மகளும் அப்பாவும் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டார்கள். பேச்சின் தொடர்ச்சியாக மௌனமும், மௌனத்தின் தொடர்ச்சியாகப் பேச்சும் இருப்பதை யார் மறுக்க முடியும்?

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com

SCROLL FOR NEXT