பள்ளிகளில் போதிய கழிப்பறைகள் வேண்டும் என்பதிலிருந்து முன்னேறி சிறப்புத் தேவை உடையவர் களுக்கான கழிப்பறை வேண்டும் எனச் சிந்திக்கத் தொடங்கியது சமூகத்தின் பெரும் மனப்பான்மை மாற்றம்.
அதிலும் கல்விக் கொள்கையின் அடிப்படையில் 80 சதவீத அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் பயன்பாட்டிலும் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
மறுபுறம் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் சிறப்புக் கழிப்பறை வடிவமைப்பிலேயே போதாமை நிலவுகிறது. சிறப்புக் கழிப்பறை என்றாலே அது சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கானது என்கிற பொதுப்புத்தி உள்ளது.
அனைவருக்குமான பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் சிக்கலை உணரும் எவரும் சிறப்புக் கழிப்பறையைப் பயன்படுத்தலாம். இந்தியக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் சிக்கலை உணரும் சிறுவர்கள், விபத்து, உடல் எடை போன்ற காரணங்களுக்காக ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படக்கூடியதே சிறப்புக் கழிப்பறை.
இந்திய பாணி:
வாசலில் ஒரு சரிவுப்பாதை அமைத்து, மேற்கத்திய கமோடு வைத்தால் மட்டும் அது சிறப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்து விடாது. வெவ்வேறு சிறப்புத் தேவை உடையவர்களும் பயன்படுத்தும்படியான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
* பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, கழிப்பறை வாயிலுக்கு முன், யூரினல்/வாஷ்பேசின் முன் தடம் உணர் கற்கள் (Tactile warning pavers) அமைக்கப்பட வேண்டும்.
* குறைந்த பார்வையுள்ள மாணவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் கழிப்பறை இருக்கை, டைல்கள் வேறுபட்ட வண்ணத்தில் இருக்க வேண்டும்.
* உயரம் குறைவானவர்கள், சக்கர நாற்காலிப் பயனாளிகளுக்கு ஏற்ற மாதிரி சுவரில் தொங்கும் யூரினல்கள் இருக்க வேண்டும். அங்குப் படிக்கட்டு இல்லாமல் அணுகக்கூடியதாகவும் மார்பு உயரத்தில் ஆதரவுப் பிடிக் கம்பிகளும் பொருத்தப்பட வேண்டும்.
* இயக்கக் குறைபாடுள்ள மாணவர்கள் சக்கர நாற்காலியில் இருந்து கழிப்பறைக்குத் தாங்களே மாறிக்கொள்ள ‘U’, ‘L’ வடிவ ஆதரவு பிடிக் கம்பிகள் உதவும்.
* சர்வதேச தரத்தில் இருப்பதாக மேற்கத்திய கமோடு கருதப்பட்டாலும், அதனைப் பொதுமைப்படுத்த முடியாது. சில குழந்தைகள் இந்தியப் பாணிக் கழிப்பறையை (Squatting pan) விரும்புகிறார்கள். ஆட்டிசம் கொண்ட சில குழந்தைகள் அதனை வசதியாக உணர்கிறார்கள். எனவே மேற்கத்திய கமோடு, இந்தியப் பாணி கழிப்பறை இரண்டும் வழங்கப்பட வேண்டும்.
* வழுக்காத தரை மிக அத்தியாவசிய தேவை.
அவசர அலாரம்:
பள்ளிக்கான சிறப்புக் கழிப்பறையின் தர அளவை யுனிசெப் நிறுவனம் பரிந்துரைக்கிறது. இதன்படி,
* மேற்கத்தியப் பாணி கமோடு கழிப்பறைகள் குறைந்தது 2000mm x 2200mm இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும்.
* கதவுகள் வெளியே திறக்கும் வகையில் 900mm அகலத்தில் இருப்பது நலம்.
* வாஷ் பேசின் தரையில் இருந்து 650–680mm (கீழ்ப் பகுதி), 700–800mm (மேல் பகுதி) உயரத்தில் மூலையில் அமைக்கப்பட வேண்டும்.
* சுவரில் தொங்கும் யூரினல்கள் 430mm இல் இருக்க வேண்டும்.
* அவசர அலாரம் சுவிட்ச்கள் கமோடு அருகில் தரையில் இருந்து 300mm மற்றும் 900mm உயரத்தில் பொருத்தப்பட வேண்டும்.
பயன்பாடு, பராமரிப்பு: சிறப்புக் கழிப்பறைகளைப் பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் தனியாக அமைக்கும்போது பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்படுகின்றன. சிறப்புக் கழிப்பறை கட்டுவது மட்டுமின்றிப் பழுது ஏற்பட்டால் உடனடியாகச் சரிசெய்வதும் அவசியம்.
பல நேரம் சிறப்புக் கழிப்பறையைப் பயன்படுத்தும் குழந்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டுத் தெரிவதால் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். சிறப்புக் கழிப்பறை சிறப்புத் தேவையுடையவருக்கு மட்டும் அல்ல. அனைத்து கழிப்பறைகளையும் அணுக எளிதாக மாற்றுவதே இந்தச் சமூக அடையாளத்தை மாற்றும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com