கரும்பலகையில் கணித ஆசிரியர் விளக்கும் கணக்கை மாணவர்கள் நோட்டில் எழுதும்போது, ஒரு பார்வை சவால் மாணவர் மட்டும் தன் காதுகளால் கணக்கைக் கேட்டபடி அமர்ந்தி ருக்கும் வகுப்பறையை நினைத்துப் பாருங்கள். சட்டங்கள் பிறப்பித்து, திட்டங்கள்வகுத்துச் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய கல்வியை (Inclusive Education) வகுப்பறைக்குள் கொண்டு வந்துவிட்டோம்.
ஆனால், அவர்களுக்குக் கற்பிக்கச் சிறப்புப் பயிற்றுநர்கள் எங்கே? அர்த்தமுள்ள உள்ளடக்கிய கல்வியின் அடிப்படை, அனைத்து விதமான மாணவர்களையும் வகுப்பறையில் அமர வைத்தல் மட்டுமல்ல. சரிசம மான, தரமான கற்றல் அனுபவத்தை அளித்தலே.
மாற்றுத்திறன் கொண்ட மாணவர் கள் தனிமைப்படுத்தப்படாமல், மற்ற மாணவர்களுடன் முழுமையாகக் கற்றல், கலைத் திட்டச் செயல்பாடு களில் ஈடு படுவதே உண்மையான உள்ளடக்கிய கல்வி. இதில் சிறப்புப் பயிற்றுநர்களின் பங்கு முக்கியமானது. இவர்களின் முதன்மைப் பணி தனித்துவமான தேவை உடையவர்களை ஆதரிக்கும் வகுப்பறைச் சூழலை உருவாக்குதல்.
பாடத்திட்ட மறுவடிவமைப்பு: வகுப்பறையில் அனைவருக் கும் ஒரே மாதிரியான கல்வி முறை நடைமுறைக்கு ஒவ்வாது. ஆகை யால், சிறப்புப் பயிற்றுநர்கள் பொது ஆசிரியர்களுடன் இணைந்து, பல்வேறு திறன்கள் கொண்ட மாணவர்களுக்கு இடமளிக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி வடிவமைக் கின்றனர்.
பிரெய்ல் புத்தகங்கள், தொடுஉணர் வரைபடங்களை வழங்குதல், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்று நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுவர்.
கற்பித்தல் முறை தகவமைப்பு: ஒவ்வொரு மாணவரின் கற்றல் பாணியைக் கருத்தில் கொண்டு கற்பித்தல் முறைகளைத் தகவமைப் பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பல உணர்வுக் கற்றல் (Multisensory Approach), அனுபவ - செயல் அடிப்படை யிலான கற்றல் (Experiential & Activity - Based Learning), கூட்டு/சக மாணவர் கற்றல் (Cooperative / Peer Lear ning), வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் (Differentiated Instruc tion) என பல்வேறு கற்றல் முறைகளைக் கையாளுகின்றனர்.
மாணவர்களின் சிறப்புத் தேவை களை அடையாளம் காண்பது இவர் களின் சீரிய பணிகளில் ஒன்று. முறையான மதிப்பீடு, முறைசாரா மதிப்பீடுகளைப் பயன்படுத்தி மாணவர் களின் திறன்களையும், குறைபாடு களையும் கல்விரீதியாகவும் சமூக ரீதி யாகவும் இவர்கள் கண்டறிகின்றனர்.
தனிநபர் கல்வித் திட்ட உருவாக்கம்: மாற்றுத்திறன் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், பொது ஆசிரியர்கள், பிற நிபுணர்களுடன் இணைந்து தனிநபர் கல்வித் திட்டத்தை (Individual Education Program) தயாரித்துச் செயல்படுத்துவதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் ஒவ்வொரு மாணவருக்கான கற்றல் அடைவுக் குறிக்கோள்கள், பிற திறன்கள், என்ன வகையான கற்பித்தல் பயன்படுத்தப்படும், கால அளவு, கற்றல் அடைவு எவ்வாறு அள விடப்படும் என அனைத்தும் சிறப்புப் பயிற்றுநர்களால் தயாரிக்கப் படும்.
பயிற்சி அளித்தல்: கேட்டல் குறைபாடு, புற உலக சிந்தனையற்ற மாணவர்களுக்கு மாற்றுத் தகவல் தொடர்பு வழி களைக் கற்பித்தல், பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு பிரெய்ல், வெண் கோல் (white cane) கொண்டு நடத்தல், தொடு உணர் வடிவியல் வரைபடங்களைப் புரிந்து கொள்ளுதல் - வரைதல், அறிவாற்றல் மாற்றுத்திறன் உடையவர்களுக்கு சமூக நடத்தை - செயல்முறைக் கல்வி போன்ற பயிற்சிகளை வழங்குவது சிறப்புப் பயிற்றுநர்களின் முக்கியப் பணி.
திரை வாசிப்பான்கள் (screen readers), பேச்சை அறியும் மென்பொருள்கள் (speech recog nition software) போன்ற உதவித் தொழில்நுட்பங்கள், கருவிகளைப் பயன்படுத்தவும் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்புப் பயிற்றுநரைப் பணியமர்த்துவது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மட்டுமன்றி கற்றல் வேறுபாடு, மீத்திறன், நடத்தைச் சிக்கல் முதலான பலவித மன மாணவர்களின் கல்வி முன்னேற் றத்துக்கும் உதவும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற் கான தேசிய நிறுவனத்தின் சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com