சிறப்பு கட்டுரைகள்

எல்லோரும் விரும்பும் முகம்

Guest Author

காலை மணி 8-45 தொடுகிறது. கடிகார முட்கள் விரைந்து கொண்டிருக்கிறன. பேருந்திலிருந்து வரிசையாக காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு மாணவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். காலை வழிபாட்டுக்கூட்டம் முடித்து மாணவரோடு மாணவராக நானும் பேசிக்கொண்டே முதல் மாடி ஏறினேன்.

வகுப்பறை நோக்கி கடந்து கொண்டிருக்கிறேன். என் வகுப்பு மாணவர்கள் மலர்ந்த முகத்தோடு வணக்கம் சொல்லிக் கடந்து போகிறார்கள். எனக்குப் பின்னால் வந்த மாணவர் "ஐயா" என்று அழைத்தார், அவர் வணக்கமே சொல்லவில்லை மாறாக என்னோடு உரையாட தொடங்கிவிட்டார். என் சிந்தனையில் நின்றவரை மாணவர்களை தம்பி என அழைப்பதும், மாணவிகளை அம்மா என அழைப்பது தான் என் வழக்கம்.

சொல்லுங்க தம்பி என அந்த மாணவனின் உயரத்திற்குக் குனிந்து அவரைக் கைகளால் ஒரு சக தோழன் அணைத்து நடப்பது போல அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டே நடக்க தொடங்கினேன். இப்படியான தோழமை அணைப்பிற்கு என்னை அந்த மாணவனின் கேள்வி கொண்டு சேர்த்து விட்டது.

மாணவரின் கேள்வி: அப்படி என்ன கேள்வி அது? அந்தக் கேள்விக்கு என்னால் நிச்சயம் சொற்களால் பதில் உரைக்கவே முடியாது. மாணவர்களிடமே கேள்வி கேட்டுக் கேட்டு விடைகளுக்கு மட்டுமே செவி சாய்த்த காதுகளில் வினாக்கள் பாய்கின்றன. முகம்வெளிரிப்போகிறது. "நான் உங்களுக்கு வணக்கம் வைப்பதே இல்லை தெரியுமா ?" என்கிறார். "ஏன் தம்பி அப்படி என்கிறேன்" நான். "இல்லை உங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது".

"அப்படியா?" என்கிறேன். "ஆமாம். நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் முகத்தைக் கோவமாவே வச்சிருக்கிங்க. ஏன் என்றான்?"

இவ்வளவு பேசியதில் அவன் கேட்ட கேள்விதான் என்னைப் பெரும் சிந்தனைக்கும் நாணத்திற்கும் உள்ளாக்கியது. உடனே நான் எனக்கு முன்பாக நாங்கள் பேசிக்கொண்டே நடப்பதைக் கேட்டுக்கொண்டே தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த என் வகுப்பு மாணவரைத் "தம்பி" என அழைத்தேன்.

அவர் சற்றும் தாமதிக்காமல் திரும்பி எங்களை நோக்கி நடந்து கொண்டே "என்னங்கய்யா"? எனக் கேட்டுக் கொண்டேஎங்கள் பக்கத்தில் வந்துவிட்டார். "தம்பி வகுப்பில்நான் எப்படி நடந்து கொள்வேன்" என்று கேட்டேன். அந்த மாணவர் எங்கள் உரையாடலை முழுவதுமாகக் கேட்டிருந்ததால் "தம்பி ஐயா அப்படிலாம் இருக்கமாட்டாங்களே" என்று கூறினார்.

"இல்லைங்கைய்யா நீங்க எங்க வகுப்பைக் கடந்து போகும் பொழுதெல்லாம் நாங்க சத்தம் போட்டுக்கிட்டுருந்தா அப்போ உள்ளே வந்து கோவமா பேசுவீங்க, முகத்தைக் கோவமா வச்சிப்பிங்க, அப்போதிலிருந்தே உங்களைப் பார்த்தா பயமா இருக்கும் எனக்கு" என்று என் மீதான அவரின் பார்வையையும் எனக்கு அவர் வணக்கம் வைக்காததற்கான காரணத்தைச் சொல்லிக் கொண்டே கடந்து போகிறார். நானும் நட்பின் அணைப்பை விடுவித்துக் கொண்டு எனக்கு உரிய வகுப்பறைக்குள் பாடம் நடத்த தொடங்கி விட்டேன்.

முகங்கள் பலவிதம்: எனக்கு ஆயிரமுகங்கள் உண்டு. வீட்டில் ஒரு முகம், வீதியில் ஒரு முகம், நட்புக்கு ஒரு முகம் என. அத்தனை முகங்களைக் கடந்தும் "ஆசிரிய முகம்" என்பது ஒன்றே எனது அழுத்தமான அடையாளமாக இருக்க முடியும். அந்த முகம்இத்தனைக் காலம் புன்னகையில்லாத, அன்பில்லாத வறண்ட முகமாக இருந்ததை ஒரு ஒற்றைக்கேள்வி சில திருத்தங்களை முகத்தில் செய்திருக்கிறது.

வகுப்பறைக்குள் என்ன நிகழினும் புன்னகை தொலைக்காத ஒற்றை முகமட்டுமே எல்லாவற்றிற்கும் மருந்தாகும் என்பதைக் கடந்து எல்லோரும் விரும்பும் முகமாக இருக்கிறது என்பதைக் கேள்வியால் கற்றுத் தந்திருக்கிறார் அந்த மாணவர். ஆசிரியர் என்பவர் கற்றுக்கொடுப்பவர் மட்டுமல்ல ஒவ்வொருவரிடம் இருந்தும் கூட கற்றுக்கொள்பவர்.

- மகா. இராஜராஜசோழன் | கட்டுரையாளர்: தமிழாசிரியர் எஸ்.ஆர்.வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம். திருச்சி.

SCROLL FOR NEXT