அன்பு மகனுக்கு அம்மா எழுதும் கடிதம். டிஜிட்டல் உலகத்தில் கடிதமா? என்று யோசிக்கிறாயா, கடிதங்கள்கூட இலக்கியமாய் மாறக்கூடும். கடிதங்கள் மன உணர்வை அழகாய் வெளிப்படுத்தும். எவ்வளவு நாட்கள்கடந்தாலும் மறுபடியும் வாசிக்கும்போதும் அதே உணர்வை தரக்கூடியவை. ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் உலக வரலாற்றையே அறிமுகப்படுத்தின. உன்னுடன் பேச நான் காத்திருக்கும் நி்மிடங்கள் எல்லாம் கனவாய் கரைந்துவிடுகின்றன.
இப்போது எல்லாம் வீட்டில் உனக்கு யாரிடமும் பேச நேரமே இல்லை. காலை கண்விழிப்பதும் அலைபேசியில்தான். பின்னிரவு வரை கழிப்பது அலைபேசியுடன்தான். அதைப்பற்றி கேட்டால் உன்னுடன் என்ன பேசுவது என்கிறாய்? சிறுவனாய் இருந்தபோது பகிர்ந்த கதைகள் எங்கே போயின? ஆதங்கமாய் பேசினால் போரடிக்கிறாய் என்கிறாய்!
அறிவுரை சொல்லி அறுக்காதே என சொல்கிறாய், நீ எங்கு செல்கிறாய் என்றால் கோபம் கொள்கிறாய்.
ஒவ்வொரு தாயிடமும் மகன், மகளிடம் பேசுவதற்கு ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. காது கொடுத்துக் கேட்க தயாராக இருந்தால் போதும். மகனே, மகிழ்ச்சி பொருளில் இல்லை. மனதில்தான் இருக்கிறது. உறவுகளின் அருமை ஆதரவற்றவர்களிடம் கேட்டால் தெரியும். உணவை கொறிக்கிறாய், வீட்டு உணவு கசக்கிறது, கடை பண்டம் நாவிற்கு சுவை தரலாம். உன் உடலுக்கு நலம் தருமா? அத்தோ, நூடுல்ஸ், புரோட்டா உடல் வளத்தைப் பெருக்குமா?
முருங்கைக் கீரையும், பொன்னாங்கண்ணியும் தரும் விட்டமினை வழங்குமா? உடலினை உறுதி செய்ய வேண்டாமா? தலைமுடியை புல்வெளியாய் கத்தரித்து கவன ஈர்ப்பு. தீர்மானத்தை தலையில் இருந்த தொடங்க வேண்டாமே! முட்டிக் கிழிந்த பேண்டை உன் ஹீரோ போல் போட்டுக் கொள்வதைவிட சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால், மது அருந்துவது தவறில்லை என்ற மனோபாவத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நண்பனுக்காக, விழாவுக்காக, மன அழுத்தத்திற்காக என ஆரம்பிக்கும் போதைப் பழக்கம் எப்போதாவதில் இருந்து அடிக்கடி பின் தினமும் என்ற நிலைக்கு வந்துவிடும். கவனமாக இரு கண்மணி, போதைப் பழக்கம் படுகுழி ஆகும். அது உன்னை தவறான விஷயங்களை நோக்கி அழைத்துச் சென்றுவிடும். பொய், திருட்டு எல்லாம் சாதாரணமாகிவிடும்.
தன்னிலை மறந்து, மதிப்பிழந்து, சுயமரியாதை கெட்டு, அவமானப்பட்டு, அசிங்கப்பட வைக்கும்.
கண்ணே! நீ வாழ விரும்பும் வாழ்க்கை இதுதானா? நன்றாக யோசி, தெரிந்தே உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளலாமா! உண்மைகளை உதாசீனப்படுத்தாதே, மனசாட்சியை உதறித் தள்ளாதே, பாக்கு வடிவில் வரும் போதைப் பொருளில் திசை திரும்பாதே! உன் வாழ்க்கை இது அல்ல. பொழுதுபோக்கு மட்டுமே வாழ்க்கை இல்லை. பயனுற வாழ வேண்டும். விழி இடுங்க, விரல் நடுங்க நீ ஆன் லைனில் விளையாடும்போது பயமாய் இருக்கிறது.
உன் உள்ளத்தை சீரழிக்கும் விளையாட்டு வேண்டாமே கண்மணி! ஒழுக்கம் உயிரைவிட மேலானது. தவறான விஷயங்கள் கவர்ந்திருக்கக்கூடியவை. தீய பழக்கங்கள் விடாது கருப்பாய் பற்றிக் கொள்ளும் இயல்புடையது. அம்மாவின் தவிப்பை, கவலையை நீ புரிந்து கொள்வாய் அல்லவா? நூறாண்டுகள் பேரோடும் புகழோடும், சீரோடும் நீ வாழ வேண்டும். இப்படியொரு மகனை பெற்றாளே மகராசி என நான் பெயர் வாங்க வேண்டு்ம். நலமாய் நீடூழி நீ வாழி...
- அருணா ஹரி | கட்டுரையாளர் எழுத்தாளர், பள்ளி முதல்வர், நவபாரத் வித்யாலயா இ-வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.