சிறப்பு கட்டுரைகள்

தலை குனிந்து கற்றால், தலை நிமிர்ந்து வாழலாம்

செய்திப்பிரிவு

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை”.

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்ற பொருளில் வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஏழே சீர்களில் உணர்த்திவிட்டு சென்றுவிட்டார். இதன் பொருள் உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் கல்வித்தர மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

இது மட்டுமல்லாமல் கணினி யுகமாக விளங்கும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய அனைத்து தரவுகளையும் ஈ.எம்.ஐ.எஸ் (EMIS) என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன.

விரல் நுனியில்: கல்வி கற்பிப்பது மட்டுமே ஆசிரியர் பணி என்று இல்லாமல், மாணவன் பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திடும் முயற்சியாக கணினியிலும், அலைபேசியிலும் பதிவேற்றம் செய்கின்ற கணினி நிபுணர்களாகவும் மாறிவிட்ட ஆசிரியர்கள் ஒரு புறம்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்று சொல்லிக் கொண்டே போகின்ற அளவிற்கு மாணவர்களை கற்றல் திறனில் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் கல்வித் துறையில் உருவாக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அரசின் திட்டங்கள் மறு புறம்.

அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு: கல்வித் துறையின் நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது தேசிய அளவிலான, மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் கல்வித் தர அடைவினை பற்றிய கணக்கெடுப்பு ஆய்வு முடிவுகளோ மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

என்ஏஎஸ் சர்வே (NAS Survey) NATIONAL ACHIEVEMENT SURVEY-2021-ன் படி மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரமானது மொழிப்பாடத்தில் தேசிய அளவில் 62% ஆகவும் மாநில அளவில் 61% ஆகவும், மாவட்ட அளவில் 60% ஆகவும் உள்ளது. கணக்கு மற்றும் சூழ்நிலை அறிவியல் பாடங்களில் சராசரியாக 57% ஆக உள்ளது.

இதே ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் மொழிப் பாடத்தில் தேசிய அளவில் 55%, மாநில அளவில் 50%, மாவட்ட அளவில் 51% என்று உள்ளது. கணக்குப் பாடத்தில் இன்னும் மிகக் குறைவு. தேசிய, மாநில, மாவட்ட அளவில் முறையே 44%, 41%, 43% ஆக உள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் பற்றிய ஆய்வில் மாவட்ட அளவில் மொழிப்பாடத்தில் 45%, கணக்கு பாடத்தில் 29%, அறிவியலில் 24%, சமூக அறிவியலில் 33% என்றுள்ளது.

கற்றல் திறன்: பத்தாம் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறன் பற்றிய ஆய்வுத் தரவுகள் இன்னும் பேரதிர்ச்சி அளிக்கின்றன. ஆங்கில பாடத்தில் 44% கணிதத்தில் 28% அறிவியலில் 34%, சமூக அறிவியலில் 36% என்ற நிலையில் உள்ளது.

இதே நிலை நீடித்தால் மேற்படிப்பு கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுகின்ற நிலைக்கு மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

மாணவர்களுக்கு வேண்டுகோள்: “மாற்றம் மட்டுமே மாறாதது”. எனவே, மாணவர் மனதில் மாற்றம் ஏற்படாத வரையில் அரசின் எந்த ஒரு திட்டங்களாலோ, ஆசிரியர்களின் கடும்முயற்சியினாலோ, பெற்றோரின் அயராத உழைப்பினாலோ எந்த ஒரு பயனும் இல்லை. எனவே அன்பான மாணவர்களுக்கு எனது வேண்டுகோள்.

“தலைகுனிந்து கற்கின்ற கல்வியே,

பிற்காலத்தில் சமுதாயத்தில்

தலை நிமிர்ந்து வாழச் செய்திடும்”

என்பதை மனதில் நிறுத்தி கற்பதில் ஆர்வம் காட்டிடுங்கள். “பருவத்தே பயிர் செய்” என்னும் பழமொழிக்கேற்ப மாணவப் பருவத்தில் கற்றிடாத கல்வியினை எண்ணி வயோதிகத்தில் வருந்தி எந்த ஒரு பலனும் இல்லை.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

SCROLL FOR NEXT