சிறப்பு கட்டுரைகள்

உயர்கல்விக்கு தொடர் வைப்பு திட்டம்

செய்திப்பிரிவு

வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு கணக்குகள் உள்ளன. அவரவர் தங்களுக்கு தேவையான கணக்குகளைத் தொடங்கி பராமரித்து வருகின்றனர். அந்த வரிசையில் TERM Deposit (தொடர் வைப்பு) பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சேமிப்பு கணக்கு என்றால் நாம் குறிப்பிட்ட பணத்தை நம்முடைய சேமிப்பு கணக்கில் எப்பொழுது வேண்டுமானாலும் வரவு வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது அதிலிருந்து பணம் எடுத்தும் கொள்ளலாம்.

ஆனால் இந்த தொடர் வைப்பு டெபாசிட் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலம் வரை சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டி விகிதத்தை விட கூடுதல் வட்டி விகிதத்தில் வைப்புத் தொகையாக வங்கியில் வைத்திருக்கலாம். இந்த கணக்கு ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். இப்போது இதில் தொடர் வைப்பு திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்:

RD - தொடர் வைப்பு: தொடர் வைப்பு கணக்கு என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டு அதாவது எடுத்துக்காட்டாக 12 மாதம் எனில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை, அதாவது ஒரே நிலையான தொகையை, மாதந்தோறும் வரவு வைக்க வேண்டும்.

இந்த தொடர் வைப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் சேமிப்பு கணக்கை விட சற்று அதிகம். மேலும் 12 மாதம் முடிந்தவுடன் நாம் கட்டிய மொத்த தொகையுடன் கூடுதலாக வட்டியையும் சேர்த்து நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இக்கணக்கை மாணவர்கள், மட்டுமல்லாமல் குடும்பத் தலைவிகள், சிறு தொழில் செய்பவர்கள் என சேமிக்கும் எண்ணம் உள்ள அனைவரும் இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச தொகையாக ரூ.50 முதல் ஐந்தின் மடங்காக அதாவது 50,55,60,65... என நம்மால் இயன்ற தொகையை சேமிக்கலாம்.

இந்த வைப்புத் தொகையின், குறைந்தபட்ச கால அளவு 6 மாதம் முதல் 120 மாதம் வரை (10 ஆண்டுகள்) சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக நமக்கு ஒரு வருட காலத்திற்கு பிறகு குறிப்பாக ரூ.10 ஆயிரம் தேவை என நினைத்தால், மாதம் மாதம் ரூ.1,000 வீதம் செலுத்தலாம். அந்த தொகைக்கு 10 மாதங்களுக்கான வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

முதிர்வு தொகைக்கு முன்பே முதலீட்டாளர் களுக்கு பணம் தேவை நெருக்கடி ஏற்பட்டால் வைப்புத் தொகையை முடித்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வங்கியைப் பொறுத்து சில அபதாரங்கள் வசூலிக்கப்படும்.

இன்றைய காலக்கட்டத்தில் எப்படி அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு என்பது ஒன்று இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு மாணவர்களும் தொடர் வைப்புத் தொகை கணக்கையும் தொடங்கி தங்களால் முடிந்த தொகையை அதில் மாதம்தோறும் வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்து வரலாம். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களுடைய மேல்படிப்பிற்கு அவர்களின் பெற்றோர்களிடமே எடுத்துக் கொடுத்து பயன்பெறலாம்.

வங்கியை அறிவோம் எளிதாய்…வாழ்வை வளமாக்குவோம் புதிதாய்…

உதவி மேலாளர்

இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி

கங்கைகொண்ட சோழபுரம்

அரியலூர் மாவட்டம்

SCROLL FOR NEXT