சிறப்பு கட்டுரைகள்

புதிய ஓசையில் புல்லாங்குழல்

செய்திப்பிரிவு

மாணவர்களை ஒரு கோணத்தில் மட்டுமே ஆசிரியரும் பெற்றோரும் அணுகினால் அவர்களிடம் இருந்து பெறும் மதிப்புரை, படிக்கமாட்றாங்க, செல்போன் பாக்குறாங்க, டி.வி பாக்கறாங்க, சொன்னபேச்சு கேட்பதில்லை என்றே அநேக பேரின் பதிலாக இருக்கும்.

இன்றைய சூழலில், வட்டமிட்டுப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளான மாணவர்களின் எண்ண வண்ணங்களை யார்தான் ரசிப்பது என்ற கேள்வியே எழும்.

வண்ணத்துப் பூச்சிகளான மாணவர்களைக் கேட்டால் அவர்கள் வாழ்க்கை கோணம் செயல்பாடுகள் நியாயமானதாகத்தான் தோன்றும். புத்தகத்தை எடுத்துப் படி, அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதிகமா பேசாதே, அவன் மதிப்பெண் பார், இவள் எவ்வளோ மதிப்பெண் வாங்கிருக்கா என்ற ஒப்பிடு, பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் ஒரே மாதிரியான பதில்களாக இருக்கும்போது, மாணவர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும். காம்ப்ளாண் குடிச்சாலும் நாங்கள் நாங்களாக வளரவே முடியவில்லை.

இப்படி பலதரப்பட்ட சூழலின் அடிப்படை பின்புலத்தில் இருந்து வரக்கூடிய இந்த மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இடம்தான் வகுப்பறை. அங்கே மாணவரைப் பேசவிட்டு பாருங்கள், வினாக்கள் ஏராளம் வரும்.எழுத சொல்லிப் பாருங்கள், கலைச்சொற்கள் தாரளமாய் விழும். கவிஞன் கிடைப்பான், எழுத்தாளன் வருவான், ஒரு ஓவியன் தோன்றுவான், விளையாட விட்டுப்பாருங்கள், வீரன்முளைப்பான்.

ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோராகவும், மாணவர்கள் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களாகவும் மாறும்போது ஆசிரியர் மாணவர் இருவரும் தங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான இடம்தான் பள்ளி வகுப்பறைகள்.

இங்கு ஆசிரியர் பணி தொழில் சார்ந்ததாக இல்லாமல் மனம் சார்ந்ததாகச் செயலாற்றும் போதுதான் அந்தப் பள்ளியும் வகுப்பறையும் ஆறாம் திணையாக மாறும். இங்கு விதவிதமான மரங்கள், பறவைகள், விலங்குகள் உண்டு. இவற்றை இனம் கண்டு கொள்பவராகவும், சொல்லித் தருபவராகவும் ஆசிரியர் இருந்தால், மாணவர்கள் பதில் கூறுபவராகவும், வினாத் தொடுப்பவராகவும் மாறுவதன் மூலம் கலந்துரையாடல் இருவரின் உள்ளும் தொடங்குகிறது.

அன்றும் சரி, இன்றும் சரி, மாணவர்களின் மனம் படிப்பு சொல்லித் தருபவரே அறிவுசார் வழிகாட்டி என நம்புகிறது. ஏனெனில் குழந்தைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற தெளிந்த அறிவினை புகட்டுபவரே ஆசியர்.

குழந்தைகளின் நண்பனாக இருந்து தட்டிக்கொடுத்துப் பாராட்டி, ஊக்கப்படுத்தி, பாடம் புகட்டிப் பாருங்கள், ஒழுக்கத்தை கற்றுக் கொள்வார்கள், பண்போடு பயணிப்பார்கள். மாணவனின் ஆளுமை மட்டுமல்ல ஒட்டுமொத்த வளர்ச்சியான மனம், அறிவு, மதிப்பு,ஒழுக்கம் என அனைத்தும் மேலோங்கும் அவர்களது வாழ்வை அழகாக்கும்.

இயற்கைச் சூழல் சார்ந்ததாக இருப்பதே கல்வி என்கிறார் தாகூர்.இயற்கையிடம் மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள முடியும். அதற்கு ஆசிரியர்கள் பொம்மலாட்டக்காரராக, கதை சொல்லியாக, கோமாளியாக, வேடிக்கைக்காரனாக, மகா கலைஞாக என்று பல வேடமிடும் வேசதாரியாக மாறினால், பேசவும், கதை சொல்லவும், அவர்கள் கதைகூற அனுமதிப்பதன் மூலம் அவனது படைப்பாற்றல் மேலோங்கும். அன்பொன்றே எல்லாவற்றையும் உருவாக்கும்.

- கட்டுரையாளர் ஆசிரியர் தமிழ்த்துறை எஸ் .ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சமயபுரம், திருச்சி.

SCROLL FOR NEXT